இரண்டு ஆண்டுகளாக எந்த அந்நிய நேரடி முதலீட்டையும் ஓர் நாடாக நாம் பெறவில்லை
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Apr 18, 2024, 6:03:04 PM
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
நாட்டின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முறையாக செயல்படுத்தப்பட்டால், முதலீட்டாளர்களுக்கு நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படும். நாடு தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டால் அன்னிய நேரடி முதலீட்டை நாம் பெறுவோம்.
இரண்டு ஆண்டுகளாக எந்த அந்நிய நேரடி முதலீட்டையும் ஓர் நாடாக நாம் பெறவில்லை. நேரடி வெளிநாட்டு முதலீடு இல்லாமல் இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது.
ஊழலுக்கு எதிரான பொறிமுறையை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும், புதிய சந்தைகளில் பிரவேசித்து டொலர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும் டொலரின் பெறுமதி அதிகரிப்பை நாடாக எம்மால் கட்டுப்படுத்த முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தவனை குறித்து அரசாங்கம் பல்வேறு கதைகளை கூறி வருகிறது. இதேவேளை, சர்வதேச பிணை முறி பத்திரப்பதிவுதாரர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை இன்னும் தாமதமாகிறது. சர்வதேச பிணை முறி பத்திரதாரர்கள் தங்கள் வட்டி விகிதத்தை குறைக்க ஒப்புக்கொண்டு அதனை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
ஊழல் மற்றும் வீண்விரயத்தை ஒழிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விரைவான பொறிமுறையை உருவாக்க சர்வதேச பிணை முறி பத்திரதாரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த நிபந்தனைகளுக்கு இணங்காததால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை உட்பட கடன் மறுசீரமைப்பு தாமதாகியுள்ளது. தற்போதைய அரசாங்கமும் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருப்பதால் தான் ஊழலுக்கு எதிராக நிரந்தர கட்டமைப்புடன் கூடிய திட்டத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது.
கடந்த காலங்களில் எண்ணெய் கொள்முதலில் அரசாங்கம் அவசர கொள்முதலை செய்தது. எரிவாயு கொள்வனவின் போதும் அவசர கொள்முதலை மேற்கொண்டது. தரமற்ற உரங்கள் கொண்டு வரப்பட்டன. தரமற்ற மருந்துகள் கொண்டு வரப்பட்டன.
2022 இல் 7 மாதங்களுக்கு மேலதிக விலைக்கு எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. சியாம் கேஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு மெட்ரிக் டொன் எரிவாயு 96 டொலருக்கு பெற முடியும் என்ற நிலையில், ஓமான் டிரேடிங் நிறுவனத்திடம் அதிக விலை கொடுத்து எரிவாயுவை கொள்வனவு செய்துள்ளனர்.
ஓமான் வர்த்தக நிறுவனத்திடம் இருந்து ஒரு மெட்ரிக் டொன் எரிவாயு 118.23 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஓமான் வர்த்தக நிறுவனம் மூலம் 14,783 மெட்ரிக் டொன் எரிவாயு இறக்குமதி செய்ததன் மூலம் 114 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கொடுக்கல் வாங்கள் ஒன்று நடக்கப் போகிறது என்று நான் இரு முறை கோப் குழுவின் தலைவரிடம் தெரிவித்துள்ளேன்.
தற்போதைய அரசாங்கமும் ராஜபக்ச அரசைப் போன்று ஊழல் மிக்க அரசாங்கமாகும்.
இவ்வாறு ஊழல்கள் நிறைந்திருப்பதாலயே சர்வதேச பிணை முறி பத்திரதாரர்கள் முன்வைத்த ஊழல் எதிர்ப்பு நிபந்தனைகளுக்கு அரசாங்கம் உடன்படவில்லை. வருமானம் காண நாட்டின் அரச வளங்களை விற்க வேண்டிய அவசியமில்லை. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை முறையாக செயல்படுத்தப்பட்டால், முதலீட்டாளர்களுக்கு நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படும். அவ்வாறு நடந்தால் நாட்டுக்கு அன்னிய நேரடி முதலீடு கிடைக்கும். இரண்டு ஆண்டுகளாக அன்னிய நேரடி முதலீடு கிடைக்கவில்லை. நேரடி வெளிநாட்டு முதலீடு இல்லாமல் இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது.
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவிய காலப்பகுதியில், வியட்நாம் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் ஒரே மட்டத்தில் இருந்தன. வியட்நாம் வேகமாக அபிவிருத்தியடைந்துள்ளது. கடந்த ஆண்டு 35,000 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வியட்நாமுக்கு கிடைத்துள்ளன. வரியை அதிகரித்து நாட்டை நிர்வகிக்க முடியாது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்து புதிய சந்தைகளில் நுழைய வேண்டும். ஏற்றுமதி சந்தையை அதிகரித்து புதிய சந்தைகளில் நுழைய வேண்டுமானால், இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். இறக்குமதி மூலம் டொலர் கையிருப்பை பராமரிக்க அன்னிய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். நேரடி அன்னிய முதலீட்டுக்கு ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாதொழிக்கும் நிரந்தர மற்றும் ஒழுங்கு முறையான வேலைத்திட்டம் தேவை. ஆனால் தற்போதைய அரசாங்கம் ஊழலையும் வீண்விரயத்தையும் கையாள்வதற்கான வேலைத்திட்டத்தை ஸ்தாபிப்பதாக தெரியவில்லை.