எட்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் வாழைச்சேனை பொது நூலகம்
எஸ்.எம்.எம்.முர்ஷித் - ஓட்டமாவடி
UPDATED: Nov 22, 2024, 9:00:01 AM
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இக்பால் சனசமூ நிலையத்தின் வாழைச்சேனை 5ம் வட்டார பொது நூலகம் சுமார் எட்டு ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாசிகசாலை வாசகர் வட்டத்தினரால் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதி மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சுமார் 30 வருடங்களாக வாசிப்பு நிலையமாக இயங்கி வந்த குறித்த வாசிகசாலை கடந்த 2016.02.01ம் திகதி முதல் வாழைச்சேனை 5ம் வாட் பொது நூலகம் தரம் iii க்கு தரமுயர்த்தி பதிவு செய்யப்பட்டு இக்பால் சனசமூக நிலைய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன், அதே கட்டிடத்தில் கடந்த எட்டு வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் குறைகள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களிலிலும் தனியாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவிதமான அபிவிருத்திகளும் செய்யப்படவில்லை.
இப்பிரதேசத்திலுள்ள பிரதானமான ஆறு பாடசாலை மாணவர்களும் பிரதேச வாசகர்களும் இதனைப் பயன்படுத்தி வருகிறனர்.
மாணவர்களுக்குத்தேவையான எந்தவிதமான பாடத்திட்ட புத்தகங்களோ கடந்த கால வினா-விடை புத்தக வசதிகளோ இதுவரை பிரதேச சபையால் செய்யப்பட வில்லை என்பது மிகவும் கலைக்குரிய விடயமாகும்.
இம்மாணவர்களுக்குத் தேவையான பல தேவைகளை இப்பிரதேச பள்ளிவாயல்கள், சனசமூக நிலைய நிருவாகத்தினர், தனவந்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களே ஓரளவு நிறைவு செய்து வருகிறனர்.
இதன் அவலநிலை குறித்து பல தடவைகள் பிரதேச சபை செயலாளருக்கும் நூலகருக்கும் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை கவலையக்கின்றது.
எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதாக வாழைச்சேனை 5ம் வட்டார பொது நூலக வாசகர் வட்டத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.