• முகப்பு
  • ஆன்மீகம்
  • தென்னிந்திய பிரபல மாணிக்க கல் வர்த்தகர் ஸலீம் ஹாஜியாருக்காக சீனன்கோட்டையில் ஜனாஸா தொழுகை

தென்னிந்திய பிரபல மாணிக்க கல் வர்த்தகர் ஸலீம் ஹாஜியாருக்காக சீனன்கோட்டையில் ஜனாஸா தொழுகை

பேருவளை பீ.எம் முக்தார்

UPDATED: Dec 1, 2024, 4:29:30 AM

அண்மையில் இறையடி சேர்ந்த தென்னிந்தியா காயல்பட்டணத்தைச் சேர்ந்த மாணிக்க கல் வியாபாரியும் தொழில் அதிபருமான கதீப் ஸலீம் ஹாஜியாரின் காயிபான ஜானாஸா தொழுகை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளி வாசலில் இடம்பெற்றது.

 பள்ளிவாசல் பிரதான இமாம் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி) ஜனாஸா தொழுகையை நடாத்த மெளலவி அல்ஹாஜ். மபாஸ் மன்ஸுர் (நுலாரி) துஆப் பிரார்த்தனை நடாத்தினார். சீனன்கோட்டை பள்ளிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையில் பெருமளவிலானோர் பங்கு பற்றினர்.

மர்ஹும் கதீப் ஸலீம் ஹாஜியார் தென்னிந்தியா தமிழகத்திலும், இலங்கையிலும் ஓர் புகழ்பெற்ற மாணிக்க வியாபாரியாக திகழ்ந்தார். அவர் கடந்த 26.11.2024 திகதி சென்னையில் காலமானார். 27 ஆம் திகதி ளுஹர் தொழுகைக்கு பின்னர் அன்னாரின் ஜனாஸா காயல்பட்டினம் மஹ்தூம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மர்ஹும் ஸலீம் ஹாஜியார் 1935 ஆம் ஆண்டு காயல்பட்டினத்தில் பிறந்தார். 1950 ஆம் ஆண்டில் இரத்தினக்கல் வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்த அவர் இரத்தினக்கல் வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தார். 

இலங்கை மற்றும் ஆங்காங் ஆகிய நாடுகளில் இரத்தினக்கல் வியாபார நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு பிரபல்யமடைந்தார். 

இலங்கையில் புகழ்பெற்ற இரத்தினக்கல் வியாபார மஸ்தியஸ்தமாக திகழும் பேருவளை சீனன்கோட்டையுடன் சுமார் 7 தசாப்த கால தொடர்புகளை வைத்திருந்து இரத்தினக்கல் வியாபார நடவடிக்கையில் நேர்மையாக செயற்பட்டுள்ளார். 

காயல்பட்டினத்திலும், இலங்கையிலும் ஸலீம்துரை என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர் பல்வேறு சமுதாய பணிகளை செய்துள்ளார். 

சீனன்கோட்டை பகுதி மூத்த இரத்தினக்கல் வியாபாரிகளுடன் கடந்த 70 ஆண்டுகளாக நீதியாகவும், நேர்மையாகவும், நம்பிக்கையுடனும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு சீனன்கோட்டை மக்களின் விசுவாசத்தை பெற்றுக் கொண்டவராவார். 

மர்ஹும் ஸலீம் ஹாஜியாருக்கு செல்வ செழிப்பு இருந்த போதிலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து முன்மாதிரி காட்டினார். Kk

காயல்பட்டினத்தில் பள்ளிவாசல் மற்றும் சமூகநல அமைப்புக்களில் பல்வேறு பதவிகளை வகித்து பாரிய பணிகளை சமூகத்திற்காக செய்துள்ளார். 

தான் சம்பாதித்த செல்வத்தை சமுதாய மேம்பாட்டிற்காக அவ்வப்போது அள்ளி வழங்கி காயல்பட்டின மக்களின் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்ட அவரின் மறைவு தமிழகத்திற்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும்.

 

VIDEOS

Recommended