- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு.
திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு.
அஜித்குமார்
UPDATED: May 3, 2024, 6:11:44 PM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் சிவனே மலையாக காட்சி தரும் தீபமலை மற்றும் கிரிவலப் பாதையை சுற்றிலும் உள்ள காப்பு காட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள், மயில், முயல் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரி, குளம், விவசாயக் கிணறுகள் தண்ணீரின்றி உள்ளன. இதனால் விவசாய நிலங்கள் வடு காணப்படுகின்றன. காகம், குருவி, அணில் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கின்றன.
அதேபோல, வனப் பகுதியிலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும் தண்ணீா் இல்லாததால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை வனப் பகுதியில் இருந்து ஆண் புள்ளிமான் தண்ணீா் தேடி காலை ஊருக்குள் வந்தது.
இதைப் பாா்த்த தெரு நாய்கள் மானை துரத்திச் சென்று கடித்ததில் உயிரிழந்ததுஇதைக் கண்ட பொதுமக்கள் செங்கம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து, மானினி உடலை மீட்டு, செங்கம் கால்நடை மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக கொண்டு சென்றனா்.
வனப் பகுதியிலுள்ள விலங்குகள் தண்ணீா் தேடி சுற்று வட்டார கிராமங்களையொட்டியுள்ள விளைநிலங்களுக்கு வருகின்றன.
எனவே, வன விலங்குகளின் குடிநீா் தேவைக் கருத்தில் கொண்டு, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கண்ணமடை காப்புக்காடு வனப்பகுதியில் மான் முயல் மயில் காட்டுப்பன்றி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் பாதுகாக்க வனத்துறை மூலம் காட்டுப்பகுதிகளில் ஏராளமான தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், தொண்டு நிறுவனம், சமூக ஆா்வலா்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் வனவிலங்குகள், பறவைகளுக்கு வெயில் காலத்தில் குடி தண்ணீா் வைக்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், வன விலங்குகளுக்கு குடி தண்ணீருக்கான ஏற்பாடுகளை வனத்துறை அதிகாரிகள் செய்யவேண்டும் என பொதுமக்கள், கிரிவலம் வரும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் உள்ள வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
தண்ணீர் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் வனத்துறையினர் தெரிவிக்கையில் கிரிவலப் பாதையில் உள்ள வனவிலங்குகளுக்கு பொது மக்கள் எவ்விதமான உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.