- முகப்பு
- மாவட்டச் செய்தி
- லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற புது மாப்பிள்ளை உட்பட 2 இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற புது மாப்பிள்ளை உட்பட 2 இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அந்தோணி ராஜ்
UPDATED: Oct 21, 2024, 10:10:12 AM
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் அருகே அம்மன் கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். பொக்லைன் வாகன ஓட்டுனர். 25 வயதான இவருக்கும், இவரது உறவினரான வினோதினி என்ற தாய், தந்தையை இழந்த பெண்ணுக்கும் கடந்த 20 தினங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது ஒன்று விட்ட சகோதரரான ரஞ்சித் குமார் (வயது 27) என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு உணவருந்தி விட்டு மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
விபத்து
இருவரும் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை கடந்து சென்ற போது, இடது புறமிருந்து அதி வேகத்தில் வந்த சாலை அமைத்து வரும் ஒப்பந்தகாரர் லாரி இரு சக்கர வாகனத்தில் மோதி உள்ளது.
இதில் கீழே விழுந்த ரஞ்சித் குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிய ரவிக்குமார், லாரியின் முன்புறம் கீழே சிக்கிய நிலையில் சுமார் 30 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
அந்த சமயம் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மற்றும் பின்னால் வந்த மற்றொரு லாரி ஓட்டுனர் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் முறையான முன்னறிவிப்பு பலகை, வேகத்தடை இல்லாததே விபத்துக்கு காரணம் எனக் குற்றம் சாட்டிய உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்ய வலியுறுத்தி இருவரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Breaking News Today In Tamil
தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி பிரித்தி தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வேகத்தடை அமைக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிய உறவினர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கை விட மறுத்து விட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் வரை அப் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.