பழனியில் மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கண்ணன்

UPDATED: Jun 26, 2024, 7:05:09 PM

பழனி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பழனி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை உருவாக்கியுள்ளது.

அவை ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. ஆனால், இந்த சட்டங்கள் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அபினியம் என சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

முக்கிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டுவது அரசியல் சட்டத்தின் 348வது பிரிவை மீறும் செயல் என்று வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

அரசியல் சட்டப்படி பார்லிமென்டில் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கட்டாயம். எனவே, சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், மூன்று நாட்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகவும் வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கலை எழில்வாணன், துணைத்தலைவர் மணிகண்டன், பொருளாளர் சரவணன், மற்றும் வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம், பால்சாமி, ஆசைத்தம்பி, செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended