சுருளி அருவி பகுதியில் யானைகள் முகாமிட்டிருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை.

ராஜா

UPDATED: Aug 3, 2024, 1:52:28 PM

தேனி மாவட்டம் 

கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். 

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்ததால் கடந்த நான்கு தினங்களாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்திருந்தனர்.

சுருளி அருவி 

இந்நிலையில் அருவியில் இன்று நீர் வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதிக்க இருந்த நிலையில் நள்ளிரவில் அருவிக்கு செல்லும் சாலையில் உள்ள பூங்கா பகுதி மற்றும் சோதனை சாவடியை சேதப்படுத்தி தேக்கம் பிளாட் பகுதியில் குட்டிகளுடன் மூன்று யானைகள் முகாமிட்டுருப்பதை பார்த்த வனத்துறையினர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சென்று குளிப்பதற்கு தொடர் தடை விதித்து யானையின் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு

அருவிபகுதியில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு இன்று அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாளை சுவாமி தரிசனம் செய்ய வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended