• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு கதறும் பெண்ணின் குடும்பத்தினர்.

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு கதறும் பெண்ணின் குடும்பத்தினர்.

சண்முகம்

UPDATED: Jul 4, 2024, 8:01:40 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அள்ளூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர் கூலி தொழிலாளி. இவரது மகள் சந்தியா என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலை பிரசவத்திற்காக பிறந்து வீட்டிற்கு வந்த சந்தியாவிற்கு கடந்த ஒன்றாம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டு உடனடியாக சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரை மருத்துவர், செவிலியர்கள் உள்ளிட்ட பலரும் பரிசோதனை செய்கின்றனர். அப்போதே பெண்ணின் கணவர் தரப்பினர் இங்கு முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நாங்கள் வேறு மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றார்கள்.

அப்போது இல்லை நாங்கள் நன்றாக சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்கிறோம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரால் பதில் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பிய சந்தியா கணவர் மற்றும் குடும்பத்தினர் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

இந்நிலையில் சந்தியாவுக்கு மூன்றாம் தேதி காலை 11 மணிக்கு மேல் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் பெண்ணின் கணவர், உறவினர்கள், அவரது குடும்பத்தினர் பிரசவ அறையில் சந்தியாவை சென்று பார்த்துள்ளனர்.

பின்னர் அரசு மருத்துவமனை தரப்பினர் 15 நிமிட இடைவெளிக்கு பிறகு திடீரென்று யாரிடமும் சொல்லாமல் அவசர அவசரமாக சந்தியாவை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அவசர சிகிச்சை உபகரணங்களோடு அதில் ஏற்றி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் குடும்பத்தினரையும் சந்தியா அழைத்துச் செல்லும் ஆம்புலன்சில் வர வேண்டாம், நீங்கள் வேறு வாகனத்தில் வாருங்கள் என்று கூறிவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனை பணியாளர்கள் சிலருடன் சந்தியாவை அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு சென்று அவரை அட்மிட் செய்து பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு சந்தியா இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தியாவின் கணவர் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்து வேதனை அடைந்தனர்.

உடனடியாக சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததின் பேரில் தனது மகள் உயிரிழந்து விட்டதாகவும், அதனை மறைப்பதற்காகவே மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும் நாடகத்தை அரங்கேற்றி தங்கள் மீது தவறு இல்லை என்று கூறி தப்பிக்க பார்க்கிறார்கள் என தெரிவித்து, சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர், செவிலியர், கம்பவுண்டர் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து சந்தியாவின் கணவர் லட்சுமணன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து இறந்த பெண்ணின் தந்தை மற்றும் குடும்பத்தினர் குறிப்பிடும்போது  சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனையில் போதுமான மருந்துகள் எப்போதும் இல்லை , சிகிச்சையும் தரமாக இல்லை கடமைக்கு என்று மருத்துவம் பார்க்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் தடுப்பூசிக்காக அனுமதிக்கப்பட்ட ஆறு மாத குழந்தை ஊசி போடப்பட்டு மறுநாள் இறந்துள்ள சம்பவமும் நடந்திருப்பதாகவும் அதனை மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைத்துள்ளது எனவும் கூறி, அதே போன்ற நிலை தான் எங்கள் சந்தியாவிற்கும் நடந்துள்ளது.

நாங்கள் அப்போதே அவர்களிடம் தெரிவித்து உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் வேறு மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்கிறோம் என்று கூறியும், அவர்கள் நாங்கள் நன்றாக பிரசவம் பார்க்கிறோம் என்று எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினர்.

ஆனால் இன்று இது போன்ற ஒரு துயர சம்பவம் நடைபெற்று உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் தவறான சிகிச்சை அளித்த சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனவும் ,அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து எங்களது பெண்ணின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வேதனையோடு சந்தியாவின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த சந்தியா நர்சிங் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் அரசு மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மூடி மறைப்பதாகவும் தங்களது தவறை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றும் இறந்த சந்தியாவின் உறவினர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளும் இல்லை என்பது தெரிந்த நிலையில், சிகிச்சைகளும் சரியாக இல்லை என்பது இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

விடியா அரசின் மருத்துவத்துறை பெண்ணின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.

இறந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended