பென்னலூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் நடுவில் மின்கம்பம் - மக்கள் அதிருப்தி.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 11, 2024, 8:19:41 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பென்னலூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள பாரதியார் தெருவில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் இருந்து வந்தது. 

இதனால் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இங்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. 

இதில் கழிவுநீர் கால்வாய்க்கு நடுவே மூன்று மின்கம்பங்கள் அமைந்துள்ளது. இதன் காரணமாக குடியிருப்புகள் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக வெளியேறாமல் மாதக்கணக்கில் தேங்கி நிற்கின்றது, அதே போல சாலையில் வழிந்து ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால் புதிய கால்வாய் கட்டியும் எந்த பயனும் இல்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் பைப்களும் கழிவு நீர் கால்வாய் நடுவில் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

குடிநீர் பைப்பில் விரிசலோ அல்லது உடைப்பு ஏற்பட்டாலோ குடிநீருடன் கழுவு நீர் கலந்து விடும் நிலை உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

VIDEOS

Recommended