• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு

ராஜபாளையம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கிராம மக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் பரபரப்பு

அந்தோணி ராஜ்

UPDATED: Nov 6, 2024, 1:25:44 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராபுரி கம்மாப் பட்டி, அம்மன் கோவில் பட்டி, நத்தம் பட்டி, ஜமீன் நத்தம் பட்டி, நத்தம் பட்டி காலனி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கீழராஜ குலராமன் அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அம்மன் கோயில் பட்டியில் இருந்து கீழராஜ குலராமன் செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியில் கீழராஜ குலராமன் கண்மாய் கலிங்கல் அருகே தரைப்பாலம் உள்ளது.

Breaking News Today In Tamil

மழைக்காலங்களில் கண்மாய் நிறைந்து கலிங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர், தரைப்பாலத்தை நிறைத்து செல்வதால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் அப் பகுதி மாணாக்கர்கள் சத்திரப்பட்டி வழியாக சுமார் 15 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனை தவிர்க்க தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்டித்தர வேண்டும் என அப் பகுதி மக்கள் பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். கடந்த ஆண்டு இந்த தரைப்பாலத்தை பார்வையிட்ட சாத்தூர் எம்எல்ஏ டாக்டர். ரகுராமன் 3 மாதங்களில் தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார்.

 

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கிய நிலையிலும், உறுதி அளித்தபடி இது வரை உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை எனக் குற்றம் சாட்டி, கம்மாப் பட்டியை சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் இன்று மேலராஜ குலராமன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துறை அதிகாரிகள், காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக ராட்சத குழாய்கள் அமைத்து அதன் மேல் சாலை அமைத்து, தடையின்றி போக்குவரத்து நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள், 4 மணி நேரத்திற்கு பிறகு போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.

 

VIDEOS

Recommended