மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்.

செந்தில் முருகன்

UPDATED: May 12, 2024, 5:44:00 PM

மயிலாடுதுறையில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. 

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இவ்வாலயத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது சிதிலமடைந்திருந்த கோயிலின் திருக்குளம் கரைகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு தண்ணீர் விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக திருக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது.

கோயில் குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிதீன் பைகளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொறுப்பின்றி வீசிவிட்டு செல்வதாலும், மீன்கள் இறந்து மிதப்பதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இறந்த மீன்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றி கோயில் திருக்குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வெயிலின் தாக்கத்தால் மீன்கள் இறப்பதாகவும், இறந்த மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை தூய்மை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended