- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாட்டா நெக்ஸான் டீசல் காரில் பெட்ரோல் போட்டதால் கார் ஸ்டார்ட் ஆகாமல் திடீரென தீயில் எரிந்து கருகியது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாட்டா நெக்ஸான் டீசல் காரில் பெட்ரோல் போட்டதால் கார் ஸ்டார்ட் ஆகாமல் திடீரென தீயில் எரிந்து கருகியது.
லட்சுமி காந்த்
UPDATED: May 31, 2024, 12:49:53 PM
ஆந்திரா மாநிலம் திருப்பதி பகுதியை சேர்ந்த வரபிரசாத் என்பவரின் காரை அவருடைய நண்பர்கள் எடுத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வந்தனர்.
காஞ்சிபுரத்தை சுற்றி பார்த்துவிட்டு நண்பர்களுடன் ஒலிமுகமது பேட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட சென்றனர்.
காரை பானு பிரகாஷ் என்பவர் ஓட்டிக்கொண்டு பெட்ரோல் பங்கில் விட்டபோது பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் கார் என நினைத்து கார் டேங்க்கில் பெட்ரோலை நிரப்பினர்.
பெட்ரோல் போட்டு கொண்டு நண்பர்கள் வெள்ளை கேட் நோக்கி கிளம்பும்போது வழியில் கார் நின்றுவிட்டது.
வண்டியை ஸ்டார்ட் செய்ய என்னன்னவோ முயற்சி செய்து, முடியாத பட்சத்தில் அலைந்து திரிந்து சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து மெக்கானிக் பிரகாஷ் என்பவரை அழைத்து வந்தனர்.
மெக்கானிக் பிரகாஷ் டீசல் காரில் இருந்த பெட்ரோலை முழுவதுமாக எடுத்து விட்டால் வண்டி ஸ்டார்ட் ஆகும் என கூறியதை தொடர்ந்து ,
டேங்கில் உள்ள பெட்ரோலை அளவீடு செய்வதற்காக, செல்போன் மூலம் டார்ச் அடித்து வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது கார் திடீரென தீ பிடித்து குபுகுபு என எரிந்தது.
திடீரென தீ பற்றியதால் திகைத்து நின்ற மெக்கானிக் பிரகாஷ் மீது தீப்பட்டதில் கை கால் முகம் என அவருக்கு காயம் ஏற்பட்டது.
உடனே தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்து தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் தீயணைக்க முயற்சித்தனர்.
காரின் டேங்க் திறந்திருந்த காரணத்தினால் தீ மள மள வென எரிந்து கார் முழுவதுமாக கருகியது.
இந்த தீ விபத்தில் காயம் அடைந்த மெக்கானிக் பிரகாஷ் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
நண்பனின் காரை வாங்கி வந்தவர்கள் டீசலுக்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.