• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பட்டா இருக்கு - இடம் எங்கே? பட்டாவிற்கு உண்டான இடத்தை காண்பிக்கவிட்டால் அடுத்த கட்டம் சுடுகாட்டில் வாழ்வது என பழங்குடி மக்கள் முடிவு.

பட்டா இருக்கு - இடம் எங்கே? பட்டாவிற்கு உண்டான இடத்தை காண்பிக்கவிட்டால் அடுத்த கட்டம் சுடுகாட்டில் வாழ்வது என பழங்குடி மக்கள் முடிவு.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 3, 2024, 7:32:00 PM

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் அவர்களின் தலைமையில், "வீட்டு மனை இன்றி அவதிப்பட்டு வருகின்ற பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கி இரண்டு வருடம் ஆகியும் இடத்தை அளந்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போதிய கல்வி அறிவு இல்லாததால் பழங்குடி இன மக்களின் சலுகைகள் சுரண்டப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அப்படியிருந்தும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தைத் மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி அறிவு புகட்டவும் எந்த அரசும் முன் வரவில்லை. அச்சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள், இன்றளவும் கல்வியறிவு இன்றியும், வீடுகள் இன்றியும் , எந்த விதமான அடிப்படை வசதிகள் இன்றியும் ஏரிக்கரைகளில் ஓலை குடிசைகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்கதிபூர் , ஓரிக்கை , செவிலிமேடு, நத்தப்பேட்டை, கன்னிகாபுரம் , சின்ன காஞ்சிபுரம், திருப்புட்குழி, சிறுகாவேரிப்பாக்கம் பகுதிகளில் ஏரிக்கரையோரம் வசித்து வாழும் 231 இருளர் பழங்குடி மக்களுக்கு, 2022 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.

பட்டா வழங்கி இரண்டு வருடம் ஆகியும், இருளர் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை எது என்பதை மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரையில் காண்பிக்கவில்லை. 

அது மட்டுமல்லாமல், இருளர் சமுதாய மக்கள் வீடு கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட, 5 லட்சத்து 7 ஆயிரம் (தலா ஒரு வீட்டுக்கு) ரூபாய் நிதியையும் , வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும், பயனாளிகளுக்கு தெரியாமலேயே மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துவிட்ட கொடுமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும்தான் நடந்துள்ளது.

பருவ மழை தொடங்க உள்ள நிலையில் ஏரிக்கரைகளில் குடிசை போட்டு வாழ்கின்ற பழங்குடி மக்கள், இடி மின்னலாலும், மழையாலும் காற்றினாலும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலைமை ஏற்படும். 

எனவே பட்டா கொடுத்த தமிழக அரசு பழங்குடி மக்களுக்குண்டான இடத்தை மழை காலத்துக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காண்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் பழங்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் தான் பட்டா இருக்கு - இடம் எங்கே என்பதை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இங்கே போராட்ட களத்தில் நிற்கின்றார்கள். ஏற்கனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவரையும் ஏழு முறை சந்தித்து மனு அளித்துள்ளோம். இது நாள் வரையில் எந்த விதமான பதிலையும் மாவட்ட நிர்வாகம் அளிக்க மறுக்கின்றது. 

விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு பட்டா கொடுத்த மாவட்ட நிர்வாகம் , இரண்டு வருடம் கடந்தும் இது நாள் வரையில் அவர்களுக்கு உண்டான இடத்தை அளந்து கல்நட்டு தராமல் உள்ளதால் , தமிழக அரசுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் செயல்படுகின்றதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.

மாவட்ட நிர்வாகம் இனிமேலும் இதுபோல அலட்சியமாக இருந்தால், ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடியேறுவார்கள் அல்லது எங்கெல்லாம் சுடுகாடுகள் உள்ளதோ அங்கெல்லாம் சென்று பழங்குடி மக்கள் சுடுகாட்டில் வசிக்க தொடங்குவார்கள் என மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பேட்டி. மகேஷ். மக்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended