வருவாய் துறையினரை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 22, 2024, 2:16:13 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் உள்ள ஊரணியை ஒட்டி ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊரணியை ஒட்டி வீடு கட்டிய மற்றொரு தரப்பை சேர்ந்த நபர் அப்பகுதியில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்த நடைபாதையை ஆக்கிரமித்து கால்நடைகள் வளர்த்து வருகிறார்.

தற்போது நடைபாதையை அடைத்து வேலி கல் ஊன்றியும், பாதையில் மாட்டு சாணங்களை குவித்து வைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தனர்.

வருவாய்த் துறையினர்

புகாருக்கு நடவடிக்கை இல்லை என்பதால் கடந்த மாதம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நடந்த சமாதான கூட்டத்தின் போது, ஏழு நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

ஆனால் உறுதி அளித்தபடி இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கேட்டதற்கு அலட்சியமாக பேசியதுடன், அதிகாரிகள் தங்களை அவமரியாதையாக பேசி விரட்டியதாகவும் குற்றம் சாட்டி இன்று அப்பகுதியைச் சேர்ந்த 100 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மேலராஜகுலராமன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த துணை வட்டாட்சியர் ராமசுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களுக்கு அந்த இடத்திலேயே தற்போது மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

VIDEOS

Recommended