சாலையில் மெட்ரோ ரயில் தண்ணீர் உதயநிதியிடம் மதுரவாயல் எம்எல்ஏ கோரிக்கை.

சுந்தர்

UPDATED: Jul 21, 2024, 9:59:27 AM

மெட்ரோ பணிகள்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. 50 சதவீதத்துக்கும் மேலான மெட்ரோ பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை ஆற்காடு சாலை மற்றும் போரூர் மார்க்கமாக கிண்டி செல்லும் சாலைகளில் ஈரடுக்கு மெட்ரோ பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தியாவிலேயே முதல்முறையாக ஈரடுக்கு மெட்ரோ பாலம் சென்னையில் தான் அமைக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மதுரவாயில் ஆலப்பாக்கம் ஆற்காடு சாலை சந்திப்பில் நடைபெறும் மெட்ரோ பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதிகாரிகளிடம் மெட்ரோ பணிகள் குறித்து கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். 

அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் மதுரவாயில் தொகுதி எம்எல்ஏ கணபதி கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்.

மெட்ரோ பணி நிர்வாகத்தினர் குழாய்கள் மூலம் பயன்படுத்தும் நீரினை சாலையில் வெளியேற்றுவதாகவும் இதனால் சாலையில் நடப்போர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி போரூர் பகுதியை சுற்றி இதனால் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்படுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

கடந்த சில வாரங்களாக சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் போரூர் மார்க்கமாக கிண்டி செல்லும் சாலை மற்றும் ஆற்காடு சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது சென்னை மெட்ரோ ரயில் பணியின்போது பயன்படுத்தப்படும் நீர் குழாய் மூலம் சாலைகளில் வெளியேற்றப்படுவதுதான்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சாலையில் மக்கள் நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போரூர் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் மெட்ரோ பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் உதயநிதியிடம் மதுரவாயல் எம்எல்ஏ, மெட்ரோ ரயில் பணிக்கான நீர் சாலையில் விடப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended