நியாய விலை கடைகளில் புதிய மெஷின் வாங்க ஒதுக்கப்பட்ட ரூ. 610 கோடி எங்கே ?

ராஜ் குமார்

UPDATED: Aug 12, 2024, 7:24:24 PM

திருவள்ளூர்

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் புதிதாக மெஷின்கள் வாங்க ஒதுகாகப்பட்ட ரூ. 610 கோடி எங்கே சென்றது என்ற விவரம் இதுவரை அறிவிப்பாக வெளியாகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 32,000 முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலை கடைகள் இயங்குகின்றன. மொத்தம் 25 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 856 முழு நேர கடைகள், 196 பகுதி நேர கடைகள் உள்ளன. 

கடந்த அதிமுக ஆட்சியில் இக் கடைகளுக்கு ஓ. ஏ. எஸ். ஒய் .எஸ் என்ற கம்பெனியில் வாங்கப்பட்ட பி .ஓ. எஸ் (பாயிண்ட் ஆப் ஸ்கேல்) மெஷின்கள் காலாவதி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ,பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட முடியவில்லை.

மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய பாமாயில் ஒரு மாதம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கான பாமாயில்லை கூட்டுறவுத்துறை அப்படியே வெளிமார்க்கெட்டில் விற்று சுவாகா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பொதுமக்களுக்கும் நியாய விலைக் கடைக்காரர்களுக்கும் இடையே அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நியாய விலை கடை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அசம்பாவிதங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதை செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

இந்த மெஷின்களின் கால வயது மூன்று ஆண்டுகள் மட்டுமே என தெரிந்திருந்தும் திமுக ஆட்சி அரியணை ஏறிய பின்னரும் அதே மிஷின்கள் தொடர்கிறது.

பழுதடையும் மெஷின்களை ஒ ஏ எஸ்ஒய்எஸ் நிறுவனத்தின் இன்ஜினியர்களாலேயே பழுது பார்க்க முடியவில்லையாம். 

இந்த மெஷின்கள் எல்லாம் தூக்கிப் போட வேண்டியதுதான் என்ற நிலைக்கு வந்துள்ளதாக மெஷினை தயாரித்த நிறுவனமே ஒப்புக் கொள்கிறதாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு புதிய மெஷின்கள் வாங்க கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ. 610 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

ஆனால் அந்த பணம் எதற்காக செலவழிக்கப்பட்டது அல்லது எந்த திட்டத்துக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது என்று அரசு வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

அப்படி எனில் அந்தத் தொகை எங்கே? என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடம் இருந்து எழுப்பப்படுகிறது.

"விரல்" வைத்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் மெஷின்கள் அனைத்தும் ரேகையை சரியாக பதிவு செய்ய வில்லை.

இதனையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் "கண் விழி" மிஷன்கள் கொண்டுவரப்பட்டன.

அதுவும் கண் பார்வை இல்லாத மெஷின் போலவே மாறியுள்ளதாம். இந்த நிலையில் நியாய விலை கடை விற்பனையாளர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அரசு உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமல், பொதுமக்களுக்கும் பொருட்கள் வழங்க முடியாமல் அவர்கள் இருதலைக்கொல்லியாக உள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஒவ்வோர் வட்டார வழங்கல் அலுவலர்களிடம் புகார் அளித்தும் உணவுப் பொருள் வழங்கினால் என்ன? வழங்காவிட்டால் நமக்கென்ன என்று ஊமையாகவே சாதித்து வருகின்றனர்.

சமீபத்தில் பதவியேற்றுள்ள உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குறைகளை சீர்படுத்த அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதை நியாய விலை கடைக்காரர்களே பாராட்டுகின்றனர்.

உணவு பாதுகாப்பு கிடங்கில் இருந்து வெளியே வரும் உணவு பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

லாரியில் கொண்டு செல்லப்படும் மூட்டைகளில் பெரியகோணி ஊசி சொருகி ஒரு மூட்டைக்கு 3 கிலோ 4 கிலோ எடுப்பதால் எடை குறைவாக இருப்பதாக தெரிகிறது.

இது போன்ற முறைகேடுகளுக்கு கிடங்கு மண்டல மேலாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை செயலாளர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து நியாய விலை கடைக்காரர்களும் தங்கள் பங்குக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை வேண்டாம் என தெரிவிக்கும் பயனாளிகளின் பெயரில் விநியோகம் செய்தது போன்று புத்தகத்தில் எழுதி ரசீது போட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்த உதவியாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியாக இருந்தாலும் புதிய மெஷின்கள் வாங்க ரூ. 610 கோடி எங்கே இருக்கிறது என்பதை உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கண்டுபிடித்து அறிக்கை விட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நியாய விலை கடைக்காரர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

 

VIDEOS

Recommended