- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருவள்ளூர் ஆட்சியரை கண்டித்து வரும் 5-ம் தேதி ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் ஆட்சியரை கண்டித்து வரும் 5-ம் தேதி ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம்.
ராஜ்குமார்
UPDATED: Jul 2, 2024, 3:07:29 PM
கடந்த பொதுத் தேர்வில் பிளஸ் டூ வகுப்பில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற 10 பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கு குறைவான 14 உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளி ஆசிரியர்கள் 250 க்கும் மேற்பட்டோருக்கான ஆய்வு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தனது பாடத்தில் நூறு சதவீதம் அளித்த ஆசிரியர்களும் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்ச்சி குறைவு குறித்து பகுப்பாய்வு நடந்தது .
இந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை எழுப்பி நிற்க வைத்து குறைவான தேர்ச்சி சதவீதம் எடுக்க காரணம் ஆசிரியர்கள் தான். மாநில அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு நான் சென்றபோது தலை குனிந்து நின்றேன்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட எனது மனைவி, ஏன் இந்த மாவட்ட ஆட்சியராக இருந்து கொண்டு இவ்வளவு குறைவாக தேர்ச்சி எடுத்துள்ளார்கள் என்ற வினாவை எழுப்பினார் .
அப்போது எனக்கு இந்த கட்டிடத்தின் உச்சி மீது ஏறி நின்று குதித்து விடலாமோ! என தோன்றியது.
இது போன்ற மனநிலை உங்களுக்கு வரவில்லையா? கண்ணாடி முன் நின்று நீங்களே கேள்வி கேட்டு காரி துப்பி கொள்ளுங்கள்.
முட்டாள்கள் போல நடந்து கொள்கிறீர்களே என நாக்கை மற்றும் பற்களை கடித்துக்கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி ஆட்சியர் போல் இல்லாமல் ஒரு ரவுடி போல நடந்து கொண்டுள்ளார் என தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
இதை கேட்ட பெண் ஆசிரியர்கள் பலர் கண்கலங்கி நின்றனர்.
தமிழ் ஆசிரியர் ஒருவரை எழுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.
தலைமை ஆசிரியர் ஒருவரை எழுப்பி விளக்கம் கேட்டபோது, தற்போதுள்ள மாணவர்கள் பலர் மயக்கத்திலேயே பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி மாணவிகளை கட்டிப்பிடித்து முறைகேடாக நடந்து கொள்ள முயல்கின்றனர்.
இவற்றையெல்லாம் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி போதை பொருள் விற்போரை கைது நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் சீரடைவார்கள் என பேசிய போது இதையெல்லாம் நீங்கள் கூறக்கூடாது இப்படி சொன்னால் நீங்கள் ஆசிரியர் தொழிலுக்கு லாயக்கற்றவர் அன்பிட் என்று தான் சொல்ல வேண்டும் என ஆட்சியர் பதிலளித்துள்ளார்.
நான் இப்படி பேசுகிறேன் என்று ஜாக்டோ -ஜியோ வில் தெரிவித்து போராட்டங்கள் கூட நடத்துங்கள்.
என்னை பற்றி மாவட்டம் முழுவதும் போஸ்டர் அச்ச்டித்து ஒட்டுங்கள். என்னை சென்னைக்கு மாற்றுங்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை என தலைக்கனம் பிடித்த மாதிரி அவர் பேசி இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 360 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் 24 பள்ளிகள் மட்டுமே 70% குறைவாக தேர்ச்சி உள்ளது.
இதற்கு எவ்வாறு வழிகாட்ட ,அறிவுரை கூற வேண்டும் என்பதை மறந்து மாவட்ட ஆட்சியர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது என தலைமை ஆசிரியர்கள் மனம் குமுறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்பாளர்களுக்கான காணொளி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 1-ம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.
2-ம் தேதி மாலை மணவாளநகர் கே இ எஸ் சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாக்டோ- ஜியோ ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.
இதைத் தொடர்ந்து 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் பயன்படுத்திய வார்த்தைகளை அப்படியே போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும்.
வியாழக்கிழமை 4-ம் தேதி ஆட்சியரைக் கண்டித்து நடத்தப்படும் போராட்டம் பற்றி ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று நோட்டீஸ் விநியோகிக்க வேண்டும் .
5-ம் தேதி மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி திங்கள்கிழமை முதல் கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருப்பு பட்டையைஅணிந்து பள்ளிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
ஆசிரியர்களிடம் மட்டும் ஆட்சியர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது வாடிக்கை அல்ல.
ஏற்கனவே கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் மீது கோபப்பட்டு பேசியதால் வழக்கறிஞர் சங்கத் தினரிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதேபோன்று விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிராகரித்து கடுமையாக பேசியிருக்கிறார்.
மேலும் அரசு ஊழியர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை அவர்களையும் ஏசியுள்ளார் என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும், ஆளுங்கட்சி பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமியிடமும் ஒர் விழாவில் மேடையிலேயே ஆட்சியர் வாக்குவாதம் செய்துள்ளார்.
அதேபோன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகன் மூர்த்தி பொது பிரச்சனைக்காக அலுவலகத்துக்கு சென்ற போது அவரை காத்திருக்க வைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்கள் பிரச்சினைக்காக வந்த போது என்னை பார்க்க மறுப்பது தவறு என ஆட்சியரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திறமையாக நிர்வாகம் செய்ய வேண்டிய ஆட்சியர் அனைத்து தரப்பு மக்களையும் உதாசீனப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.