• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார் பகுதியில் கை துப்பாக்கி (பிஸ்டல்) ஒன்று குப்பை கொட்டும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனுார் பகுதியில் கை துப்பாக்கி (பிஸ்டல்) ஒன்று குப்பை கொட்டும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 5, 2024, 1:25:24 PM

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள கொருக்கன்தாங்கல் பகுதியில் ஒரு வீட்டின் அருகே இருந்த குப்பையில் கைத்துப்பாக்கி ஒன்று கீழே கிடந்துள்ளதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கைத்துப்பாக்கியை கிட்டே நெருங்கி சென்று பார்ப்பதற்கு கூட அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.

ஏற்கனவே ஆதனூர் ஊராட்சியில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடைபெற்றதாலும், திமுக கட்சியை சேர்ந்த ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் எப்போதும் 10 க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் துணையுடன் நடமாடி வருவதாலும் , பதற்றத்துடன் காணப்படும் அந்த பகுதியில், கலக்கத்தில் வாழ்ந்து வரும் மக்கள் துப்பாக்கியை எடுத்து பார்த்து உண்மை தன்மையை அறிய அச்சமுற்று மணிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றி இந்த துப்பாக்கி எந்த வகையை சார்ந்தது?. எப்படி இங்கு வந்தது? உரிமம் உள்ள துப்பாக்கியா? அல்லது நாட்டு துப்பாக்கியா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

 படப்பை, ஆதனூர்,கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறையினர் பார்த்தனர்.

ரிவால்வர் மாடலில் இருக்கும் அந்த கை துப்பாக்கியை கைப்பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் இது பிளாஸ்டிக் துப்பாக்கி என காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஒரிஜினல் ரிவால்வர் போலவே இருந்த இந்த துப்பாக்கியை பயன்படுத்தி, சமூக விரோதிகள் யாரையாவது மிரட்டி பணம் பெற்றார்களா? அல்லது மிரட்டலுக்காக இதை பயன்படுத்தி பயமுறுத்தினார்களா? என்ற கோணத்திலும் மணிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே அலர்ட்டாக உள்ள இந்த ஊராட்சியில் சாலை ஓரத்தில் கை துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கி உள்ளது.

குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனுார் ஊராட்சியில் தலைவராக உள்ள திமுக வைச் சேர்ந்த தமிழ் அமுதன் , ஏற்கனவே எல்.இ.டி., விளக்குகள் வாங்கியது, மின்சாதன குப்பை வண்டி வாங்கியது, ஊராட்சி மன்ற கட்டடம் பராமரிப்பு, வாகன நிறுத்துமிடத்தில் ஷெட் அமைத்தது, புதிய பணியாளர்களை நியமனம் செய்தது, பூங்கா பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தது மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்தது ஆகிய பணிகளுக்காக, சுமார் 70 லட்ச ரூபாயை, இஷ்டம் போல் செலவிட்ட காரணத்தால், 

ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகம் பறித்து, ஊராட்சி சட்டம், பிரிவு 202, 203, 204 மற்றும் 205ன் கீழ், ஊராட்சி மன்ற தலைவருக்கு உண்டான, கடமை மற்றும் பொறுப்புகள், வரையறைக்குட்பட்ட சட்டப் பிரிவுக்குள் செயல்பட தவறியதால், ஊராட்சி மன்றம் தற்காலிகமாக அப்போது முடக்கப்பட்டது.

அப்போதிலிருந்தே அந்தப் பகுதியில் பதட்டமும் கலக்கமும் சமூக விரோத செயல்களும் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் ரிவால்வர் எனப்படும் ஒரு பிஸ்டல் (ஒரிஜினல் போலவே இருக்கும் பிளாஸ்டிக்) கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பேட்டி பழனி. கெருக்கன்தாங்கள் 6 வது வார்டு உறுப்பினர்.

 

VIDEOS

Recommended