மாணவர்களுக்கு  தொற்றுநோய் கொடுக்கும் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 12, 2024, 10:38:19 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை காந்தி மைதானத்தில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நீதித்துறை நடுவர் நீதிமன்றம், ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சமக்ர சிஷ்யான், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

பல்வேறு அரசு அலுவலகம், மாநகராட்சி பள்ளிகள் அமைந்துள்ள காந்தி மைதானத்தில், மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் குளம்போல தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி வடியாமல் உள்ளது.

அதேபோல் பிஎஸ் சீனிவாசா மேல்நிலைப் பள்ளி அருகேயும் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. தேங்குகின்ற இந்த மழை நீரும்,கழிவுநீரும் வடிய இடமில்லாததால் வளாகத்தை சுற்றி சுற்றி வருகின்றபடியால் மில்லியன் கணக்கில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் மையமாகவும்,

மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தொற்றுநோய் கொடுக்கும் இடமாகவும் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியும் பி எஸ் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியும் மாறிய நிலைக்கண்டு பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதுள்ளது. 

இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளி வளாகத்தில், தாழ்வாக உள்ள பகுதியில் மண் கொட்டப்பட்டு சமன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, லாரிகளில் மண் எடுத்து வரப்பட்டு, 100க்கும் மேற்பட்ட லோடு மண் பள்ளி வளாகத்தில் தாழ்வாக உள்ள பகுதியில் கொட்டப்பட்டது.

ஆனால், மண் குவியலை சமன்படுத்தும் பணியை துவக்காமல் கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், ராணி அண்ணாதுரை மேல்நிலைப் பள்ளி வளாகம், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் சத்துணவு மைய கட்டடம், இறை வணக்க கூட்டம் நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், இரு பள்ளியிலும் இறை வணக்க கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளது.

டாக்டர் பி.எஸ்.எஸ்., பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு செல்லும் ஊழியர்கள், கழிவுநீர் கலந்த மழைநீரில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல, நீதிமன்றத்திற்கு செல்வோர் சகதியான சாலையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, ராணி அண்ணாதுரை, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் பள்ளி அமைந்துள்ள காந்தி மைதானத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, மைதானத்தில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ள மண்ணை சமன்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நமது செய்தியாளர் கேட்டபோது, பிஎஸ் சீனிவாசா பள்ளியிலும் ராணி அண்ணாதுரை பள்ளியிலும் டிரைனேஜ் கனெக்சன் ஏற்படுத்துவதற்கு ஒப்பந்த புள்ளி வைக்க வேண்டும் ,அதற்கு கவுன்சில் கூட்டம் கூட்ட வேண்டும், கவுன்சில் கூட்டம் நடைபெறாததால் மாநகராட்சி சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended