• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குடி தண்ணீர் வீணாகி குற்றாலம் நீர்வீழ்ச்சி போல் காணப்படும் அநியாயம்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குடி தண்ணீர் வீணாகி குற்றாலம் நீர்வீழ்ச்சி போல் காணப்படும் அநியாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 11, 2024, 8:01:49 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவ பிரிவின் முதல் தளத்தில் கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரண்டாவது தளத்தில் பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கான பராமரிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவும், நான்காவது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவும், மேலும் குடும்ப கட்டுப்பாடு பிரிவும், செயல்படுகின்றன. 

இங்கு நாளொன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் இயங்கிவரும் ஐந்து பிரிவுகளிலும் சேர்த்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு துணையாக அட்டெண்டர் எனப்படும் அவர்களின் உறவினர்களும் நூற்றுக்கணக்கான பேர் இங்கு வந்து காத்து கொண்டிருப்பர். இங்கு காத்திருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியான குடிதண்ணீர் இல்லை.

பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் , செம்ப் எனப்படும் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றிலிருந்து மின் மோட்டார்கள் மூலம் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படும்.

இதுபோன்ற நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த மெத்தன போக்கை கடைபிடித்து

தொட்டிகளுக்கு ஏற்றப்படும் மின் மேட்டாரை இயக்கிவிட்டு, மதுபானம் அருந்திவிட்டு உறங்கி விடுவார்கள் என கூறப்படுகிறது .

அதனால் தினந்தோறும் சுமார் 3 மணி நேரம் இந்த தொட்டிகளிலிருந்து தண்ணீர் வெளியேறி ஐந்தாவது மாடியில் இருந்து, குற்றால நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் கீழே விழுந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவி சேரும் சகதியமாக காணப்படுகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோயாளிகளையும் நோயாளியின் உறவினர்களையும் பாடாய படுத்துகிறது. 

மக்களின் வரிப்பணமும் தினந்தோறும் வீணாகுகின்றது தினந்தோறும் நள்ளிரவில் நடைபெறுகின்ற இந்த அநியாயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தண்ணீர் எல்லாம் கீழே ஆறுபோல ஓடி வீணாகி போகின்றது . காலையில் பார்த்தால் குடிக்க , குளிக்க, கழிவறைக்கு செல்ல தண்ணீர் இல்லாமல் சிகிச்சை பெற வந்த பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுன்றனர்.

குற்றால நீர்வீழ்ச்சி போல் விழுகின்ற தண்ணீரில் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளின் உறவினர்கள் அந்த தண்ணீரில் வெட்ட வெளியில் குளிப்பதும் துணி துவைப்பதும் பாத்திரங்கள் கழுவுவதும் சிறுநீர் கழிப்பதும் போன்ற அநியாயம் அரங்கேறி வருகின்றது.

தண்ணீர் ஊற்றும் இடத்துக்கு 20 அடி தூரத்தில் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் அறையும், குடும்ப நலத்துறை அலுவலகமும் , கண் சிகிச்சை மருத்துவ வளாகமும் என எல்லாம் இருந்தும் வீணாகப் போகும் குடி தண்ணீரை யாருமே கண்டுகொள்ளாமல் தினந்தோறும் கடந்து செல்வது வேதனைக்குரியது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மருந்து மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குடித்தண்ணீரும் மிக முக்கியம். இந்த வார்டு அருகே மருத்துவர்கள் தங்கும் குடியிருப்பு உள்ளது அப்படி இருந்தும் எந்த ஒரு மருத்துவரும் இந்த பகுதியில் வீணாகி வெளியேறும தண்ணீரை பற்றி சற்று கூட கண்டுகொள்வதில்லை என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பொதுமக்கள் மருத்துவமனையின் வெளியில் உள்ள கடைகளில் ரூபாய் 40 செலுத்தி இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிதண்ணீர் பாட்டில்களை வாங்க வேண்டியுள்ளது. அந்தத் தண்ணீரும் முறையான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

மத்திய மாநில அரசுகள் குடிதண்ணீரை வீண்படுத்தக் கூடாது என பல விதமான அறிவுறுத்தல்கள் செய்து வந்தாலும் மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக தினந்தோறும் இதுபோல ஆயிரக்கணக்கான லிட்டர் குடித்தண்ணீர் வீணாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் நடைபெறுவது மிகவும் மன்னிக்க முடியாத குற்றம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended