- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழனி கிரிவீதி மக்களின் நலன்களைக் காக்க எம்எல்ஏ வலியுறுத்தல்.
பழனி கிரிவீதி மக்களின் நலன்களைக் காக்க எம்எல்ஏ வலியுறுத்தல்.
கண்ணன்
UPDATED: Jun 30, 2024, 5:07:29 PM
பழனி அடிவாரம் கிரிவீதி மக்களின் நலன்களைக் காக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சட்டப் பேரவையில் சனிக்கிழமை வலியுறுத்தினாா்
பழனி அடிவாரம் கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அண்ணா செட்டிமடம் என்ற இடத்தில் உள்ள சுமாா் 120 குடும்பங்களை அகற்ற வருவாய்த் துறைக்கு கோயில் நிா்வாகம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இவா்களுக்கு பழனியில் இருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஒன்றரை சென்ட் இடத்தை வருவாய்த்துறை வழங்கியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் சனிக்கிழமை 'ஜீரோ' நேரத்தில் பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், அடிவாரம் பகுதி மக்கள் நலனுக்காக கவன ஈா்ப்பு தீா்மானத்தை முன்மொழிந்தாா்.
அதில், பழனியில் உள்ள கிரிவலப் பாதையில் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அண்ணா செட்டிமடம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 120-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் பாதிக்கும் நிலைஉருவாகியுள்ளது இவா்களுக்கு நிரந்தர தீா்வை ஏற்படுத்தி தரவேண்டும்.
மேலும், அங்கு பட்டா நிலங்களில் உள்ள வியாபாரிகள், அந்தப் பகுதியில் விளைநிலங்களுக்கும், வேளாண் பணிகளுக்கும் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் ஆகியோா் வாழ்வுரிமையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே அனைத்து தரப்பு மக்களும் வாழ திட்டம் வகுத்து தரும் தமிழக அரசு பழனி வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றாா் அவா்.