வீராணம் ஏரியை காப்பாற்ற வேண்டாம் அழிக்காமல் இருந்தாலே போதும் கூலித் தொழிலாளி வேதனை குமுறல்.

சண்முகம்

UPDATED: May 22, 2024, 5:42:57 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தின் விஎன்எஸ்எஸ் மதகு பகுதியில் வீராணம் ஏரியின் குளிக்கும் படிக்கட்டு உள்ளது.

இங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் கடந்து செல்லும் பகுதியாகவும், பலர் ஏரியின் கரைகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் கப்புகள் கண்ணாடி மது பாட்டில்களை உடைத்து ஏரிக்குள்ளே வீசியும் செல்வது தினசரி நடந்து வருகிறது.

இவ்வாறான நிலையில் பலர் பழைய துணிகளை தூக்கி வீசியும் வருகின்றனர். இவ்வாறான நிலையில், இப்பகுதி அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜன் என்பவர் மது குடித்து ஏரிக்கு உள்ளே உடைத்து வீசப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தூக்கி வீசப்பட்ட துணிகளை தனி ஒரு ஆளாக சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

இதனைப் பார்த்த பலரும் அவரை உனக்கு ஏன் வேண்டாத வேலை என்று கேட்டுவிட்டு சென்றதோடு சரி. ஆனால் அவரோ ஏரியில் தண்ணீர் நிரம்பும்போது நான் மட்டுமல்ல இங்கு வரும் ஆயிரக்கணக்கானோர் இந்தப் படிக்கட்டு வழியாகத்தான் இறங்கி குளித்துவிட்டு செல்கின்றனர்.

மற்றும் மீனவர்களும் ஏரிக்குள்ளே இறங்கி மீன் பிடிக்கின்றனர். அப்போது ஏரிக்குள்ளே உடைத்து வீசப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், உடலை கிழித்து காயம் ஏற்படும்.அது மட்டுமல்ல ஏரியின் தூய்மை கெட்டுப் போகும்.

அதனால் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்னால் முடிந்த அளவு நான் குளிக்கும் படிக்கட்டு பகுதியை சுத்தம் செய்கிறேன் என்று கூறினார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கும்போது ஏரிப் பகுதியில் இதேபோன்று இருபதுக்கு மேற்பட்ட படிக்கட்டுகள் இருந்து வருகின்றன இதில் அப்பகுதி மக்கள் குளித்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான மக்களும் இந்த படிக்கட்டின் வழியாக இறங்கி தான் ஏரியிலே குளித்துவிட்டு செல்கின்றனர்.

அதேபோன்று ஏரியின் பல்வேறு இடங்களிலும் மீனவர்கள் ஏரிக்குள்ளே இறங்கி மீன் பிடிக்கின்றனர். இப்படி அனைவருக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் உடைந்த கண்ணாடி பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பலவற்றை ஏரியின் ஓரம் உள்ள ஒவ்வொரு பகுதி மக்களும் அப்புறப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முடிந்தவரை ஏரியை யாரும் காப்பாற்ற வேண்டாம். பாழ்படுத்தாமல் இருந்தாலே போதும் என அவர் வேதனையோடு தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் வீராணம் ஏரிக்கு உள்பகுதியில் பல்வேறு இடங்களிலும் சுமார் 100 கிலோ அளவில் குப்பைகள் வீசப்படுகின்றன என இப்பகுதி மக்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர் என்பதுடன் குறிப்பிடத்தக்கது.

பேட்டி : நாகராஜன் பூதங்குடி

 

VIDEOS

Recommended