ஆற்காட்டில் 60 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

பரணி

UPDATED: Jul 5, 2024, 7:49:09 AM

ஆற்காட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் டீ கப்புகள் ஆகிய வற்றை கடைகளில் விற்பனை செய்யவும், உபயோகப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி ஆணையாளர் வெங்கட்லட்சுமணன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சத்தியமூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆற்காடு பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 10 மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இரண்டு கடைகளுக்கும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரு கடைகளில் இருந்து 60 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

VIDEOS

Recommended