விழிப்புணர்வு இல்லாமல் வீணாகும் கள்ளக்குறிச்சி நகராட்சி பசுமை உரப்பூங்கா.

கோபி பிரசாந்த்

UPDATED: Apr 27, 2024, 12:10:56 PM

கள்ளக்குறிச்சி நகராட்சி பசுமை உரப்பூங்கா மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள், விவசாயிகளிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், விற்பனையின்றி தேக்கமடைந்து வீணடிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள், தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றின் அருகே கொட்டப்பட்டு வந்தது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காதவை என தரம் பிரித்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மக்கும் குப்பையில் இருந்து மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்காக, திடக்கழிவு மேலாண்மை துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி திடல் மற்றும் மின் மயான வளாகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் பசுமை உரப்பூங்கா (நுண்ணுயிர் உரம் மையம்) அமைக்கப்பட்டது.

உரம் தயாரிப்பு துவங்கியதையடுத்து, நகராட்சியின் 21 வார்டுகளிலும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.

அதில் மக்கும் குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் நிறுவனத்திற்கும், சாலை அமைப்பதற்கு பயன்படுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை, சாகுபடிக்கு முன்பாக விவசாய நிலங்களில் பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதற்காக, உரப்பூங்காவில் தயாரிக்கும் பசுமை உரம் ஒரு டிராக்டர் டிப்பர் குறைந்தபட்சம் ரூ.1,000 விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், விவசாயிகளிடையே இந்த உரம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததால் விற்பனையாகவில்லை. நகராட்சியில் டன் கணக்கில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், முறையான பயன்பாடியின்றி நகராட்சி மயான பகுதியில் ஆங்காங்கே கொட்டி சமன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. பயிர் சாகுபடிக்கு முன்பாக கிராமப் புறங்களில் மாட்டு சானம் உள்ளிட்ட உரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். அதுவும் போதுமான அளவில் கிடைப்பதில்லை.

எனவே, நகராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் குறித்து விவசாயிகளிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

குறிப்பாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களில், வேளாண் துறை அதிகாரிகள் இயற்கை உரங்கள் குறித்து விளக்கி கூறலாம். இல்லையெனில் அந்த திட்டத்தின் நோக்கமே வீணாகிவிடும என்பதில் சந்தேகமில்லை.

 

  • 2

VIDEOS

Recommended