உதகையில் 126 வது மலர்  கண்காட்சியை காண உள் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

அச்சுதன்

UPDATED: May 12, 2024, 9:09:46 AM

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதம் கோடை சீசன் காலமாகும். 

இந்த காலகட்டத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவிக்க உதகைக்கு சுற்றுலா வருவது வழக்கம்.

அவ்வாறு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில்,

இந்த ஆண்டு 126வது மலர்க்கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கி வரும் 20ம் தேதி வரை என 10 நாட்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது.

இதற்காக தயார் செய்யப்பட்ட 45 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், ஆலந்தூரியம், சால்வியா, டெய்சி, சைக்லமன் மற்றும் பல புதிய ரக பூக்களான ஆர்ன் மென்டல்கேஸ், ஓரியாண்டல்,லில்லி போன்ற பூக்களும், மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பல வண்ண மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான நுழைவு வாயில்கள்,

30 அடி உயரத்திற்கு 1லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு குழந்தைகளை கவரும் வகையில் பிரம்மாண்டமான டிஸ்னி வேர்ல்ட், 80 ஆயிரம் வண்ண ரோஜா மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்த்து பெற்ற உதகை மலை ரயில், தேனி, முயல்,மிக்கி மவுஸ் போன்ற செல்பி ஸ்பாட் மற்றும் 2லட்சத்தி 60 ஆயிரம் வண்ண ரோஜா மலர்கள், கார்நேஷன்,சாமந்தி போன்ற மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக மலர் கண்காட்சியின் முதல் நாள் மற்றும் இறுதி நாளில் பிரம்மாண்டமான இரவு நேர LASER LIGHT SHOW நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

மேலும் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து நெரிச்சலை கட்டுப்படுத்தவும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாவது நாளான இன்று ஏராளமான சுற்றுலா பகுதிகள் 126 வது மலர் கண்காட்சியை கண்டு ரசித்து வருவதோடு மலர் அலங்காரங்கள் முன்பு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended