• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 22, 2024, 8:46:41 AM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததன் காரணமாக வறட்சி நிலவியது. இதனால் மலையடிவார ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்த சில தினங்களாக நகரில் மிதமான மழை பெய்தாலும், வனப் பகுதியில் மழைப் பொழிவு முற்றிலுமாக இல்லை.

மேற்கு தொடர்ச்சி மலை

இன்று திருச்சி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் தேனி, திண்டுக்கல் என 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, மாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசியம்மன் கோவில் மற்றும் மலட்டாறு உள்ளிட்ட பீட்டுகளில் கன மழை பெய்தது. இதனால் நீராவி அருவியில் தற்போது குற்றால அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.

வெள்ளப் பெருக்கு 

இதனை தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் இன்று மாலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்கவும், பக்தர்கள் ஆற்றை கடந்து மறு கரையில் உள்ள அய்யனார் கோயிலுக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளப் பெருக்கை தொடர்ந்து ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டுள்ள தடுப்பணை மூலம் நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

VIDEOS

Recommended