ராஜபாளையத்தில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இரண்டு மணி நேரம் கனமழை

அந்தோணி ராஜ்

UPDATED: May 10, 2024, 5:17:55 AM

ராஜபாளையத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு சுமார் 2 மணி நேரம் வரை பெய்த இடியுடன் கூடிய கன மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்த நேரம் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த மாதம் 12ம் தேதி கன மழை பெய்தது. அடுத்து வந்த ஒரு மாத காலமும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் மதிய நேரத்தில் பொது மக்கள் வெளியே வரவே அஞ்சும் சூழல் நிலவியது. பகல் வெயிலின் தாக்கம் இரவிலும் தொடர்ந்ததால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக பொது மக்கள் இரவில் நிம்மதியான உறக்கம் இன்றி தவித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த போதும், ராஜபாளையத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், சுமார் 9 மணிக்கு மேல் வெப்ப சலனம் காரணமாக மிதமாக சாரல் மழை பெய்தது.

நேரம் செல்லச் செல்ல சாரல் மழை இடி, மின்னலுடன் கூடிய கன மழையாக மாறியது. 8 மணிக்கு மேல் நகர் பகுதிகள், கிருஷ்ணாபுரம், புதுப்பட்டி, அய்யனாபுரம், கொருக்கான் பட்டி, கோபாலபுரம், நத்தம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இக் கனமழையானது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் நகரில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதும் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் சுற்றி வசிக்கும் பொது மக்கள், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவதிக்கு உள்ளாகினர்.

 

VIDEOS

Recommended