- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட கேங்வார்.
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட கேங்வார்.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 13, 2024, 4:39:49 AM
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கோதண்டம் சரிதா தம்பதிகள். கோதண்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீஸராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மூத்த மகன் பார்வேந்தன் பட்டபடிப்பு படித்துவிட்டு கஞ்சா மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டுவருகிறார். இவர் மீது மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பார்வேந்தனின் உடன்பிறந்த தம்பியான சின்னையன் என்கின்ற உதயநிதி பிஎஸ்சி முடித்துவிட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுவாக்கம் பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளார்.
இவரும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இவரின் நண்பரான படுநெல்லியை சேர்ந்த கிரி (22) என்பவரும் மேற்பட்ட குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே போல இவர்களுக்கு எதிர்துருவமாக கஞ்சா மற்றும் மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகிற கோவிந்தவாடி அகரம் காலனி பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் மணிகண்டன், தனது நண்பர்களான பகவதி மற்றும் விக்கி உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிந்த வாடி அகரம் பகுதியை சேர்ந்த கஞ்சா மொத்த விற்பனையாளரான புருஷோத்தம்மன் இறந்துவிட்ட நிலையில் அவரது இடத்தை அடைய எண்ணிய பார்வேந்தன் கடந்த மயானகொள்ளை விழாவின் போது மணிகண்டன் கேங்க்-ஐ மிரட்டி 10,000 ரூபாய் பெற்றதையடுத்து இரு எதிரெதிர் துருவங்களுக்குள் கேங்க் வார் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மணிகண்டன், பகவதி, விக்கி உள்ளிட்ட மேலும் சிலர் பார்வேந்தனின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்து வெளியில் வந்த சரிதா என்ன ஏதென வந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்த போதே சடார்ரென 4 பேர் கத்தியை எடுத்து கோதண்டம் மற்றும் சரிதா ஆகியவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
அச்சமுற்ற சரிதா மணிகண்டன் பகவதி ஆகியோரின் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி தயவு செய்து என் மகனை விட்டு விடுங்கள் என எவ்வளவோ மன்றாடி அழுது பார்த்தார்.
போதையில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் பெற்றோர்களின் கழுத்தில் கத்தியை வைக்க இரண்டு பேர் படுக்கை அறையின் உள்ளே நுழைந்து , அங்கு பார்வேந்தன் இல்லாததால் அவரது தம்பி சின்னையன் என்கிற உதயநிதியை கொடூரமாக தலை,கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயநிதி இரத்தம் பீரிட்டு சம்பவ இடத்திலேயே தாய்,தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்து போனார்.
இதனையெடுத்து மணிகண்டன், பகவதி,விக்கி உள்ளிட்ட கேங்க் அங்கிருந்து கோவிந்தவாடி அகரம் அடுத்த படுநெல்லி கிராமத்திற்கு சென்று அங்கு பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த ராமரின் மகன் கிரி என்பவரை கொலை செய்யும் நோக்கில் சராசரியாக வெட்டிவிட்டு தலைமறைவாயினர்.
இதனையெடுத்து படுகாயம் அடைந்த கிரியை பகுதி மக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இருவேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இருவேறு சம்பவங்கள் தொடர்பாக பாலுச்செட்டி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதயநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசாங்க ஊழியரான கோதண்டம் சரிதா தம்பதிகளின் மகன்கள் இருவரும் கஞ்சா கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதால் ஏற்பட்ட கேங் வாரில் 20வயதுடைய இளைஞரான உதயநிதி படுகொலை செய்யப்பட்டதும், இவரது நண்பர் கிரி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.
நல்வாய்ப்பாக பார்வேந்தன் கடந்த வாரம் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது நிகழ்ந்திருக்கிறது.
ஏற்கனவே இந்த பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறப்பது காவல்துறையினருக்கு நன்றாக தெரியும். கஞ்சா கடத்தல் சம்பந்தமாக ஏற்கனவே கேங்குவார் நடைபெற்று இருவர் படுகொலை செய்யப்பட்டதும், இரண்டு காவலர்களை தாக்க முயற்ச்சித்ததும், இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதும் , பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா புகைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருவது உளவுப்பிரிவு காவலர்களுக்கு நன்கு தெரியும் .
இதை கட்டுபடுத்த தவறியதன் விளைவாக இக்கொலை மற்றும் கேங்க்வார் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிகிச்சையில் உள்ள பார்வேந்தன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் மேலும் கொலைகள் நடக்ககூடும் என இப்பகுதி அச்சம் தெரிவிக்கின்றனர்.