நாய்குட்டி கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்ததால் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை 

லட்சுமி காந்த்

UPDATED: Oct 27, 2024, 3:14:21 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருவீதிபள்ளம் குடியிருப்பு பகுதி அருகே வசிப்பவர் டிகேஸ்வரன் மனைவி கிரிஜா (42) தம்பதிகள்.

கிரிஜா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். டிகேஸ்வரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இருவேறு சமூகத்தை சேர்ந்த டிகேஸ்வரன் - கிரிஜா தம்பதியினர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை இல்லாததால் தன்னுடைய வீட்டில் மிகவும் செல்லமாக நாய் வளர்த்து வருகின்றனர். வீட்டில் செல்லமாக வளர்த்த நாய் 5 குட்டிகள் ஈன்றுள்ளது. மேலும் 2 குட்டிகள் போடும் என டிகேஸ்வரன் கூறியிருந்த நிலையில் அடுத்ததாக 2 குட்டிகள் ஈன்று அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்துள்ளது.

தற்கொலை

இது சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவர் டிகேஸ்வரன் 8.30 மணிக்கு போனில் கிரிஜாவிடம் இரண்டு குழந்தையை சாகடித்து விட்டாயே என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கிரிஜா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மறுமுறை டிகேஸ்வரன் போன் செய்து எடுக்காததால் அருகில் உள்ள குடும்பத்தினர் சென்று பார்த்ததில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லோரிடமும் அன்பாக பழகும் தலைமை காவலர் கிரிஜா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் காவலர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கி உள்ளது.

 

VIDEOS

Recommended