• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் வீணாக வயல்வெளியில் வழிந்தோடும் குடிநீர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் வீணாக வயல்வெளியில் வழிந்தோடும் குடிநீர்.

செந்தில் முருகன்

UPDATED: May 1, 2024, 8:31:04 AM

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் காலை ஒரு மணிநேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மணல்மேடு அடுத்த முடிகண்டநல்லூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் மூலம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு அதன் பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் 2 மணிநேரம் காலை வேலையில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது கடும் வெப்பம் வறட்சி நிலவுவதால் நீர்ஊற்று குறைந்ததால் தினமும் காலை ஒரு மணிநேரம் கூட முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை.

மேலும் முடிகண்டநல்லூரில் இருந்து மயிலாடுதுறைக்கு தண்ணீர் கொண்டு வரும் பிரதான குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

இந்நிலையில் வில்லியநல்லூர் பகுதியில் செல்லும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளியில் வழிந்தோடிக்கொண்டு இருக்கிறது.

மேலும், இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறுகையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வயலில் ஓடிக்கொண்டிருக்கிறது இதனால் உளுந்து, பயிறு சாகுபடிக்கூட செய்ய முடியவில்லை.

இதனை உடனடியாக சரிசெய்யவில்லை என்றால் குறுவைசாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்றார்.

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் இதுபோல் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சரிசெய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

  • 3

VIDEOS

Recommended