• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து மூன்று கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்.

நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து மூன்று கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்.

செ.சீனிவாசன் 

UPDATED: May 7, 2024, 9:55:18 AM

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவன சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளதால் இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்தி இதுவரை விரிவாக்க பணிகளை தொடங்காத சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும், உண்மையான கூலி விவசாயிகளை கணக்கிட்டு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி 3 ஊராட்சி பொதுமக்கள், விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகையை உண்மையான விவசாயிகளை கண்டறிந்து வெளிப்படையான ஆய்வு செய்து, கூலி விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீட்டு தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் எதிரில் பந்தல் அமைத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended