• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவேற்காட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

திருவேற்காட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

S.முருகன்

UPDATED: Jul 16, 2024, 6:18:50 PM

Latest District News 

திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் கணேசன் ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு கொசு 

அதனையும் மீறி அலட்சியத்துடன் செயல்பட்டு டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க ஆணையர் கணேசன் நகராட்சி சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ் மேற்பார்வையாளர்கள், டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேவையற்ற பொருள்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று தீவிரமாக சோதனை செய்தனர். 

இந்த நிலையில் நேற்று திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் பள்ளி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended