• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடி அருகே குக்கிராமம் ஒன்றில் மாணவர்களுக்கு இலவசமாக அரசு வேலைக்கு தயார் படுத்தி வரும் தனியார் அமைப்பு

மன்னார்குடி அருகே குக்கிராமம் ஒன்றில் மாணவர்களுக்கு இலவசமாக அரசு வேலைக்கு தயார் படுத்தி வரும் தனியார் அமைப்பு

தருண் சுரேஷ்

UPDATED: May 12, 2024, 6:33:48 AM

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை சார்ந்த மாவட்டம். ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தை பொறுத்தவரை கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.

இருந்த போதிலும் பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஷ்டப்பட்டு பல்வேறு உயர்கல்வியை வழங்கிவரும் நிலையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பு ஏற்ப வேலையின்றி குடும்ப சூழ்நிலையை அறிந்து சொற்ப வருமானத்திலும் கிடைத்த வேலையை செய்து வருவதோடு, ஒரு சிலர் வேலைவாய்ப்பு இன்றி தவறான செயல்களுக்கு சென்றும் தங்களது எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருவதோடு, பெற்றோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்களது குழந்தைகள் படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பெருந்தொகை செலவிட்டு இதற்காக செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் சேர்த்து உரிய நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற வசதி கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் குக்கிராமத்தில் கலைமகள் என்ற அமைப்பு ஒன்று சிறந்த கல்வியாளர்களை கொண்டு தென்பரை கிராமம் மட்டுமன்றி சுற்று வட்டார பகுதி மாணவ மாணவியர்களையும் இணைத்துக்கொண்டு அரசு போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளை அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறது.

இத்தகைய பயிற்சி வகுப்பானது பள்ளி விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறை காலத்தில் தொடர்ச்சியாகவும் காலை 10 மணி முதல் மதியம் 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவ மாணவியர்களுக்காக தொடங்கப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சேர்ந்து அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சியினை பெற்று வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இத்தகைய பயிற்சி வகுப்பு மூலமாக ஏராளமான மாணவ மாணவியர்கள் பல்வேறு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்று பயன் அடைந்துள்ளனர்.

இத்தகைய சிறப்பு பயிற்சிக்காக மாணாக்கர்களிடம் இருந்து ஒத்த பைசா கூட கட்டணம் வசூலிக்காத இத்தகைய கலைமகள் என்ற தனியார் அமைப்பானது, மாணவ மாணவியர்களுக்கு அருகில் உள்ள உணவு விடுதிகள் வாயிலாக குறைவான விலைக்கு மதிய உணவினையும் வழங்கி மாணவ மாணவியர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், அவர்களது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருந்து வருகிறது.

தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

என்ற திருக்குறளுக்கு ஏற்ப தாம் இன்பமடைவதற்கு காரணமான கல்வியால், உலகமும் இன்படையவதைக் கற்றறிந்த அறிஞர் கல்வியை விரும்புவர்.


   

VIDEOS

Recommended