- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மணலி பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
மணலி பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து
சுரேஷ் பாபு
UPDATED: Jun 16, 2024, 1:57:50 PM
சென்னை மணலி அடுத்த விச்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் கிடங்கு உள்ளது.
அதில் திடீரென தீப்பற்றியதால், தீ மள மளவென பரவி கிடங்கு முழுவதும் எரியத் தொடங்கியதால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பெயரில் நிகழ்வு இடத்தில் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை வ உ சி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாது 3 ஸ்கை லிஃப்ட் வாகனங்களும் நிகழ்வுடத்துக்கு வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும் பெயிண்ட் மூலப்பொருட்கள் அதிகளவு எரிந்து வருவதாலும் ரசாயன பேரல்கள் வெடித்து சிதறிவருதாலும் அதன் அருகில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் வானளவு கரும்புகை எழுந்துள்ளதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காவல் துறையினர் அங்கு கூடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மேலும் கூடுதலாக தீயணைப்பு வாகனங்களை வரவழைக்கக் கூடிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் பணியிலும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசாயன பொருட்கள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அதனை அணைக்கும் பணி தீயணைப்பு தறையினருக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பெயிண்ட் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வரும் நிலையில் முழுமையாக தீயை கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பொருட் சேதம் குறித்தும் யாரேனும் உள்ளே சிக்கிக் கொண்டார்களா என்பது குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் தெரியவரும் எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடசென்னை தீயணைப்பு மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.