கடம்பத்தூர் ஒன்றியத்தில் பழங்குடி இன குடிமனைகளை, லஞ்சம் கொடுத்தால்தான் அளவீடு என குமாராச்சேரி ஊராட்சி செயலாளர் கரார்.
சுரேஷ் பாபு
UPDATED: Jul 31, 2024, 9:11:14 AM
கடம்பத்தூர்
கடம்பத்தூர் ஒன்றியத்தில் பழங்குடி இன மக்களின் குடிமனைகளை, பணம் கொடுத்தால் தான் அளவீடு செய்ய முடியும் என வசூலில் இறங்கிய குமாராச்சேரி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடம்பத்தூர் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடுகாட்டில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு 234 பழங்குடி இன குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
Latest Thiruvallur News & Live Updates
அதனையடுத்து 2023 ஆம் ஆண்டு அரசு கொடுத்த நிலத்தில் 80 தொகுப்பு வீடுகள் தொடுகாடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு 70 குடிசைகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை, மின் விளக்குகள் அமைக்கப்படும் என 2023 ஆம் ஆண்டு கடம்பத்தூர் பிடிஒ எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல் வாசனாம்பட்டில் 11 குடும்பங்களுக்கு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. மேல் தளம் வரை சென்ற பிறகும், ஒரு தவணை மட்டும் வழங்கியுள்ளனர் இன்னும் 3 தவணைகள் வழங்கவில்லை.
பெண்கள் கழுத்தில் இருந்த தாலியை கூட அடமானம் வைத்து தங்கள் வீடுகளை கட்டி வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் பணம் இன்னும் விடுவிக்கவில்லை.
Thiruvallur News Today Live
அதே போல் திருப்பாச்சூர் வசந்தம் நகரில் பட்டா பெற்ற 37 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்க வேண்டும் என கடந்த ஒரு வருடமாக வலியுறுத்தியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், குமாரச்சேரியில் குடியிருந்த 18 குடும்பங்களுக்கு செஞ்சிபனம்பாக்கத்தில் 2023-ல் பட்டா வழங்கப்பட்டது. அந்த மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்க வேண்டும், பாக்குப்பேட்டையில் சாலை வசதி, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
போராடி பெற்ற நிலத்தை அளவீடு செய்து உரிய பயனாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமல்படுத்தாமல், அளவீடு செய்ய ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.500 வழங்க வேண்டும் என குமாராச்சேரி ஊராட்சி மன்ற செயலர் கேட்டதாக கூறப்படுகிறது.
Tiruvallur District News
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடம்பத்தூர் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து குமாரச்சேரி ஊராட்சியில் பழங்குடி இன மக்களிடம் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்க ரூ.500 கேட்ட புகாரின் பேரில் 15 நாட்களில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
NEWS
மேலும் பழங்குடியினர் மக்களுக்கு சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி போன்றவை செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பிரேராணை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்பகல் 1 மணி அளவில் கடம்பத்தூர் பிடிஒ வரதராஜன் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.