எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும். - அம்மாச்சி உணவக திறப்பு விழாவில் வடக்கு ஆளுநர்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Jun 26, 2024, 5:16:11 AM
யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (25/06/2024) திறந்து வைத்தார்.
அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம் மேற்கு பகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தார்.
உள்ளூர் கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,
“ மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து பிரதேச சபைகள் செய்யற்பட வேண்டும். அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாகவும், மாகாண சபையினூடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ALSO READ | தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமத்தினர் சாலை மறியல்
வட மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். ஒவ்வொரு பிராந்தியங்களுக்குமான வெவ்வேறு தனித்துவங்கள் காணப்படுகின்றன. எமது மண்ணின் தனித்துவங்களையும் பாரம்பரியங்களையும் நாமே பாதுகாக்க வேண்டும்.
யாழ்ப்பாண உணவுகளுக்கு வெளி பிரதேச மக்களிடமும், வெளிநாட்டு மக்களிடமும் அதிக வரவேற்பு காணப்படுகின்றது. அவற்றை தொடர்ந்தும் பேணி பாதுகாக்க வேண்டும். அம்மாச்சி பாரம்பரிய உணவகங்கள் ஊடாக தொடர்ச்சியாக மக்களுக்கான தரமான, சுவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.