சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் - குகதாசன் mp
ஏ. எம். கீத் - திருகோணமலை
UPDATED: Dec 6, 2024, 3:19:18 AM
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து என்னை இந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய வாக்காளர் பெரு மக்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு , நீண்ட காலம் திருகோணமலை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப் படுத்திய மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களை நினைவு கூர்ந்தவனாக 10 ஆவது நாடாளுமன்றத்தில் எனது முதலாவது உரையை ஆற்ற விழைகின்றேன்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 06-12-2024
எனது உரையில் மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பாகவும் , அண்மையில் நிலவிய காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்கள் தொடர்பாகவும் கருத்துரைக்க விரும்புகின்றேன்.
மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் தனது உரையில் ஊழலற்ற, இனவாதமற்ற, மதவாதமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையான ஒரு ஆட்சியை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க கூற்றாகும். இதற்கு முன்பு கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் மேற்கொண்ட ஊழல், இனவாதம், மதவாதம் மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சி முறை ஆகியன இந்த நாடு இன்றைய இக்கட்டான சூழ்நிலையை அடைய முதன்மையான காரணி என்பது அனைவரும் அறிந்த விடயம்.
எனவே குடியரசுத் தலைவர் கூறியவாறு ஊழலற்ற, இனவாதம் அற்ற, மதவாதம் அற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை முதலியவற்றைக் கொண்ட ஆட்சியை சொல்லில் மட்டுமின்றி இந்த அரசு செயலிலும் காட்ட வேண்டும்.
“ சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் “
என்ற வள்ளுவர் வாக்கினை நினைவில் கொண்டவர்களாக இந்த ஆட்சியாளர்கள் செயல்படுவார்கள் என நம்புகின்றேன் . மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையில் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக ஆக்கப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர் இருந்தார், இன்று 13 பேருக்கு ஓர் அரசு ஊழியர் காணப்படுகின்றார் என கூறப்படுகின்றது. எனவேதான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.
அடுத்து அவர் பேசுகையில் பொதுச் சொத்துக்களை களவாடியவர்களை,மோசடி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் வந்த அரசுகளும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூறின, ஆட்சிக்கு வந்த பின்பு எதுவும் நடக்கவில்லை , யாரும் தண்டிக்கப்படவும் இல்லை , ஆனால் இந்த அரசு கூறியதனை கூறியவாறு செய்யும் என நம்புகின்றேன். அத்தோடு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவது மட்டும் அன்றி அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தினையும் வளத்தினையும் மீளப் பெற வேண்டும்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயம்பியுள்ளார்.
வேளாண்மை துறை, கடற்தொழில் துறை மற்றும் கைத்தொழில் துறை முதலியவற்றில் இந்த நாடு நீண்ட தூரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளது.இத்துறைகள் வளர்ச்சி கண்டால் மாத்திரம் போதாது அபிவிருத்தியும் அடைய வேண்டும்.
பொருளியலில் வளர்ச்சியும் , அபிவிருத்தியும் வெவ்வேறானவை . வளர்ச்சி என்பது ஒரு மரம் செங்குத்தாக வளர்வது போன்றது. அபிவிருத்தி என்பது அந்த மரம் பல்வேறு கிளைகளை பரப்பி வளர்வது போன்றது.
அதனைப் போன்று கமத்தொழில்,கடற்தொழில்,கால்நடை வளர்ப்பு மற்றும் கைத்தொழில் துறைகளும் பல்வேறு கிளைகளை விட்டு அபிவிருத்தி காண வேண்டும், அத்தோடு மக்களிடையே வருமானப் பங்கீடும் நியாயமானதாக அமைய வேண்டும்.
ஒரு காலத்தில் பொலிவியா நாட்டில் அந்த அரசின் அயராத முயற்சியால் நாட்டின் பொருளாதாரம் 20% ஆல் உயர்ந்தது . இந்த வளர்ச்சிக்கு முன்பு பொலிவியா நாட்டில் 60 வீதமான வருமானத்தினை 40 வீதமான மக்களும் 40 வீதமான வருமானத்தினை 60 வீதமான மக்களும் வைத்திருந்தனர்.
ஆனால் வளர்ச்சிக்குப் பின்பு பார்த்தபோது 80 வீதமான வருமானத்தினை 20 வீதமான மக்களும் 20 வீதமான வருமானத்தினை 80 வீதமான மக்களும் வைத்திருந்தனர். இது ஒரு பொருளாதார அபிவிருத்தி அல்ல. எனவே தான் இந்த அரசு பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தியில் மட்டுமன்றி வருமான பங்கீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகின்றேன்.
அதேபோன்று வேளாண்மை துறை,கடற்தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஆகியவற்றில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும். எமக்கு அயலில் உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்பத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயத்துறை மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதேபோன்ற பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
அதேபோல கணனி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடி என்று அழைக்கப்படுகின்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் ஆற்றி வரும் பணிகளையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இங்கு கல்வி கற்றவர்கள் அந்த நாட்டிற்கு கொண்டு வருகின்ற அந்நிய நாணய மாற்றின் அளவையும் , பொருளாதார மேம்பாட்டுக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
[05/12, 18:35] குகதாசன் ஜயா: தொடர்ந்து குடியரசு தலைவர் உரையாற்றுகையில் கல்வித்துறை மேம்பாடு குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். கல்வித்துறையினை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றல் கற்பித்தல் முறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளதுடன் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்க்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் என ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரிய ஆளணியை மாவட்டத்திற்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப்பங்கீடு சரியான முறையில் அமையவில்லை. ஆசிரியர் நியமனத்தின் பொழுது பெரும்பாலான ஆசிரியர்கள் திருகோணமலைக்கு வருகின்றார்கள், வந்து சில காலங்களில் தத்தமது மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றார்கள்.
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கல்வியற் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம்.
உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளரின் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றது. இதே முறையை கல்வி அமைச்சும் பின்பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம்.
மேலும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித்துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 1.3 வீதமான நிதியும் 2024இல் 1.5 வீதமான நிதியுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறைந்தது 5 வீதமாக ஆவது உயர்த்த வேண்டும்.
மேற்குலக நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5 வீதத்துக்கும் கூடுதலான தொகையினை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதனையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
மேலும் குடியரசுத் தலைவர் தனது விளக்க உரையில் கப்பல் போக்குவரத்து துறையினை மேம்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். திருகோணமலையில் உள்ள இயற்கை துறைமுகமானது இந்துமா கடலில் போக்குவரத்து செய்கின்ற கடற்கலங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய ஓர் நடுவத்தில் அமைந்துள்ளது.
இந்த துறைமுகத்தினை விருத்தி செய்து அயலில் உள்ள வெண்ணெய்க் குதங்களையும் மறுசீரமைப்பு செய்தால் பெருமளவான அந்நிய நாணய மாற்றினை ஈட்ட முடியும் என்பதோடு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பும் வழங்க முடியும். இதற்கு துறைமுகத்தினை மேம்படுத்துவதோடு இடையீடு இன்றி மின் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
மேலும் குடியரசுத் தலைவர் தனது உரையில் சுகாதார மேம்பாடு பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் மாவட்ட மருத்துவமனையில் 54 மருத்துவர் பற்றாக்குறையும் 9 துறை சார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 7 செவிலியர் பற்றாக்குறையும் 3 மருந்தாளர் பற்றாக்குறையும் 39 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் 3 சாரதிகள் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
மேலும் மாகாண அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 40 துறைசார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 21 மருத்துவர் பற்றாக்குறையும் 27 செவிலியர் பற்றாக்குறையும் 22 மருந்தாளர் பற்றாக்குறையும் 06 மிகை ஒலி ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறையும் 100 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.
இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் மத்திய அரசின் கீழ் உள்ள திருகோணமலை மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவானது ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் குறையாக காணப்படுகின்றது. இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதனால் நோயாளிகளை நிருவகிக்க போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இக்கட்டிடத்தினை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தொடர்ந்தும் குடியரசுத் தலைவர் தனது கொள்கை விளக்க உரையில் “ Clean Srilanka “ பற்றியும் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்டமானது 90 கிலோ மீட்டர் நீளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் கடற்கரையினைக் கொண்டுள்ளது, எனினும் இந்த கடற்கரைகள் போதுமான தூய்மையினை கொண்டவையாக காணப்படவில்லை.
போத்தல்,பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கரை ஒதுங்கும் இடங்களாக காணப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க ஆவன செய்யப்பட வேண்டும்.
முன்னுரைத்தவாறு அவர் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் , நீண்ட காலமாக இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டான முன்மொழிவுகள் எதனையும் அவர் முன் வைக்கவில்லை என்பது கவலை தோய்ந்த செய்தியாகும்.
“ சொல்லாமலே செய்வர் பெரியார் “
என்னும் முதுமொழிக்கு அமைய மேன்மை தங்கிய குடியரசு தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இச்சிக்கலுக்கு ஒரு நிலையான தீர்வினை காண்பார் என்ற நம்பிக்கையோடு குடியரசு தலைவர் அவர்களின் 10 ஆவது கொள்கை விளக்க உரை மீதான கருத்துரையினை நிறுத்திக் கொண்டு, அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றி இந்த உயரிய சபையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான அளவில் 23,463 ஏக்கர் நெற்செய்கையும் பகுதி அளவில் 10,525 ஏக்கர் நெற்செய்கையும் சேதமடைந்துள்ளன. இதனால் 12,994 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இம் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாகவும் 18 குளங்கள் பகுதியளவிலும் உடைப்பெடுத்துள்ளன.
அதேபோன்று மாவட்டத்தின் கடற்கரை பிரதேசத்தினை அண்டி வாழ்கின்ற மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்லாத காரணத்தினால் 23,178 மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானத்தினை இழந்து இன்னல் உறுகின்றனர். மேலும் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்த காரணத்தினால் 4250 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட அனைத்து தரப்பினருக்கும் இடருதவிகள் வழங்க ஆவன செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டு எனது உரையினை நிறைவு செய்கின்றேன்.