• முகப்பு
  • இலங்கை
  • பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் ஜனாதிபதி தலைமையில் வெளியிடப்பட்டது

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் ஜனாதிபதி தலைமையில் வெளியிடப்பட்டது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 28, 2024, 4:12:33 PM

யுத்த சவால்களை வெற்றி கொண்டு, அரசியல் களத்தில் பல சவால்களை எதிர்கொண்ட சரத் பொன்சேகா, எதிர்காலத்தில் நாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்ய முடியும்.

முப்பது வருட யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, "இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி - இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்" என்ற தலைப்பில் எழுதிய நூலின் வெளியீட்டு விழா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு வழங்கினார். அதனையடுத்து, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதிக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி, யுத்தத்தில் வெற்றியடைந்ததோடு, பல அரசியல் சவால்களையும் எதிர்கொண்டவர் என்று கூறினார். அவர், எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

"பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிகொண்டதோடு, அரசியல் சவால்களையும் எதிர்கொண்டார். யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை அறிந்துகொண்டேன். அவர் முன்னாள் பிரதமர் காலத்திலும், யுத்தத்திலும் முக்கிய பங்காற்றினார். 

சரத் பொன்சேகா, யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியபோது, யாழ்ப்பாணத்தை கையளிக்க எடுத்த முடிவுகள் முக்கியமானவை. அவர் கஷ்டமான தீர்மானங்களை எடுத்து, யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். 

உலகத்தின் மிக மோசமான யுத்தத்தை நாம் எதிர்கொண்டோம். மற்ற நாடுகளில் இன்றும் யுத்தங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், சரத் பொன்சேகா தனது பொறுப்பை சிறப்பாக செய்தார். 

அதேபோல், சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டார். அவர் தனிமையும், சிறையிடப்பட்டதும் வலுவான மனிதராக அவரை மாற்றியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி, சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை வழங்கியது சரியான முடிவாகும்.

சரத் பொன்சேகாவின் சேவைகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்தத்திலும், அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. எதிர்காலத்தில் அவரிடமிருந்து நாட்டுக்கு பெரும் பங்களிப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட வேண்டும். சரத் பொன்சேகா ஒரு முறை கூறியபடி, நாடு ஒன்றுபட்டு முன்னேற வேண்டும். இராணுவம் அனுபவங்களால் நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த முடியும்." 

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியதாவது:

"படையினரின் அர்ப்பணிப்பின் பலனாகவே யுத்தத்தை வெற்றிகொண்டோம். ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு நான் கௌரவத்தை தெரிவிக்கிறேன். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோல், நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்தினர்.

முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால், அர்ப்பணிப்புக்காகவே யுத்தத்தை வெற்றிகொண்டோம். யுத்தத்தின் பின்னர் மக்களும், ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தாரா என்பது கேள்விக்குரியது."

மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், அனோமா பொன்சேகா உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

VIDEOS

Recommended