• முகப்பு
  • இலங்கை
  • தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்!

தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்!

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 2, 2024, 7:52:42 AM

அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது.

சர்வதேச தரம்வாய்ந்த தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஏராளமான தரச் சான்றிதழ்களைப் பெறுவது அவசியமாகும்.

இந்தத் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களில் அடிக்கடி கண்காணிப்பு சோதனைகள் நடப்பதுண்டு. குறிப்பாக உணவு, குடிபானம் உள்ளிட்ட உற்பத்திகளில் இந்த தரக் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாளும்போது, அனுமதியின்றி உட்பிரவேசித்து, உற்பத்திகள் நடக்கும் இடத்தில் குழப்பம் விளைவிப்பது அந்த உற்பத்தித் துறைக்கும், அந்த தொழிற்சாலைகள் பெற்றுள்ள தரச் சான்றிதழ்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும்.

குறிப்பாக இவ்வாறான தொழிற்சாலைகளுக்குச் செல்லும்போது, உரிய அனுமதியுடன் செல்வது கட்டாயமாகும்..

தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்வதேச வர்த்தகம் சார் உற்பத்திகளின் போது அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்துகொள்வது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பெற்றுள்ள வர்த்தக நாமத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று தோட்டக் கம்பனி சார்பாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், தொழிலாளர் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது அவசியம் என்றும், அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்துகொள்வது ஒட்டுமொத்த தேயிலை சன்நாமத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரச்சினைகளின் போது இதனைவிட ஆக்கபூர்வமாக, சட்டரீதியாக அணுகுவது எதிர்காலத்தில் தொழிலாளர்களின் நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்குமே தவிர, அரசியல் பலத்துடன் இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் பயனளிக்காது என்றும் பெருந்தோட்ட துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் செயற்பாடுகளை அரசியல் விமர்சகர்களும், சிங்கள தேசிய ஊடகங்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி : 

நுவரெலியா, நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கம்பனிக்குச் சொந்தமான தோட்டத்தில், தேயிலை உற்பத்திக்குப் பதிலாக, கோப்பி பயிருடவதற்காக குறித்த நிறுவனம் பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்தத் திட்டத்தை ஆரம்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேசத்தில் இரண்டு தோட்டத் தலைவர்கள் இருவர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது.

இதனையடுத்து குறித்த இரண்டு ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து அந்த நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

தொழிலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தோட்ட முகாமைத்துவ அதிகார சபையினர் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து அண்மையில் குறித்த தொழிற்சாலைக்குச் சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது ஆதரவாளர்களுடன் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

VIDEOS

Recommended