பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தெரியாத புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கொச்சைப்படுத்தக் கூடாது
கண்டி நிருபர் - ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Dec 5, 2024, 4:39:48 PM
பாராளுமன்ற சம்பிரதாயங்கள் தெரியாத புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கொச்சைப்படுத்தக் கூடாது என மற்றொரு புதிய பாராளுமன்ற உறுப்பினர் திலிப் ஜயவீர தெரிவித்தார்.
பொதுத் தேர்தலின் பின் பாராளுமன்றம் முதலாவதாகக் கூடிய போது எதிர் கட்சி ஆசனத்தில் கௌரவ உறுப்பினர் ஒருவர் அமர்ந்தமை தொடர்பாகவே சர்வஜன பலவேகய கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலிப் ஜயவீர கண்டியில் வைத்து இதனைத் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன், அவர் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த போதே ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்-
பாராளுமன்றத்திற்கென்றே ஒரு சம்பிரதாயம் உள்ளது. அதனை மீறுவது பொருத்தமற்றது, அதனை நானும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். புதிய வர்கள் நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும், நிலையியற் கட்டளைகளையும் தெரிச்து கொள்ள வேண்டும் என்றார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்ததாவது-
பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் போன்ற சில பதவிகளில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வேறு யாரும் அமர்வது இல்லை. நடந்த சம்பவம் கவலைக்குறியது.
புதியவர்கள் இப்படியான விடயங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் ரொசான் ரனசிங்கவும் உடன் சமூகமளித்திருந்தார்.