• முகப்பு
  • இலங்கை
  • இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதும், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதும் எமது கடல் வளங்களை அழிக்கிறது

இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதும், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதும் எமது கடல் வளங்களை அழிக்கிறது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 11, 2024, 6:05:00 PM

ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தார்.

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.  

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,

“ஒலுவில் துறைமுகத்தை புனரமைத்து மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள், கடற்படையினர், துறைசார் நிபுணர்கள், ஒலுவில் பகுதி புத்திஜீவிகள், மற்றும் பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். 

அந்தப் பிரதேச மக்களின் நலன்களைப் பேணும் வகையிலும் அங்குள்ள வளங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்கின்ற வகையிலும் துறைமுகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறித்த துறைமுகத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டறிவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். அப்பணிகளை நிறைவு செய்து விரைவாக எமது இலக்கை அடைய வேண்டும்.

மேலும், அண்மையில் இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது. குறித்த விஜயம் தொடர்பில் அமைச்சரவையிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். எமது நாட்டிற்கு வருமானம் ஈட்டும் வகையிலும், நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் ஜனாதிபதியின் பயணம் அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்

அதேநேரம், இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதும், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதும் எமது கடல் வளங்களை அழிக்கிறது. அது மட்டுமன்றி எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த, இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின்போது இந்திய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார். 

மேலும் இந்தியப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். எனவே இந்த விடயம் குறித்து இரு நாடுகளும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கடற்றொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையிலும் கடற்றொழில்துறை வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் நாம் கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

துறைசார் நிபுணர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களின் கருத்துகளைப் பெற்றுக்கொண்டு இந்த சட்டத்தை மிக சிறப்பான முறையில் தயாரித்து பாராளுமன்றத்திற்கு முன்வைக்கவுள்ளதால் அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். மேலும் கடற்றொழில்துறை தொடர்பான நியதிச்சட்டங்களைத் தயாரிக்கவும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.


தற்போது எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் மாத்திரமன்றி நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி வருகின்றோம். அதேநேரம், நன்னீர் மீன்வளர்ப்பு, நீர் முகாமைத்துவம் குறித்தும் விசேட அவதானம் செலுத்தி வருகின்றோம். 

1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு வன ஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்புத் துறைக்கு பெற்றுக்கொண்ட காணிகளை மீளவும் குறித்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தின் பிரகாரம், காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் உட்பட வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் உள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களுக்கும் நான் விஜயம் செய்து, அந்தப் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன். எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று எனது விஜயங்களின் போது அப்பிரதேச மக்கள் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி, பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசை யுகம் என்பனவற்றைத் தீர்த்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது ஆதரவை வழங்கி அவருடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க அவர்கள் தயாராகவுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

 

 

 

VIDEOS

Recommended