• முகப்பு
  • இலங்கை
  • காதி நீதவான்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செயலாளர் தெரிவிப்பு நீதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

காதி நீதவான்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செயலாளர் தெரிவிப்பு நீதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 21, 2024, 7:10:50 PM

நாடெங்கிலும் சேவையில் ஈடுபட்டுள்ள காதி நீதவான்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு நீதி அமைச்சின் செயலாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல் நீதிமன்ற வலயங்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் பிரகாரம், முஸ்லிம்களின் விவாகப் பிணக்குகளை விசாரித்து தீர்வுகளையும்,தீர்ப்புகளையும் வழங்குவதற்கென நீதிச் சேவை ஆணைக்குழுவினால் காதி நீதவான்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக பதினைந்தாயிரத்துக்கும் குறைவாகவே வழங்கப்பட்டு வருகின்றது.

ஜூரி(நடுவர்) கள் மற்றும் விவாக பிணக்குகள் சம்பந்தமாக சமரசம் செய்துவைக்கும் ஆலோசகர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இது பகுதிநேரப் பணியாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் கூட, வாரந்தோறும் இதற்கான வெவ்வேறுவிதமான விண்ணப்பங்களையும்,முறைப்பாடுகளையும் பொறுப்புணர்ச்சியுடன் பல நாட்கள் அலசி ஆராய்ந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் காதி நீதவான்களுக்கு இதுகால வரை வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவு எவ்விதத்திலும் போதுமானதல்ல.

 என்பதனால், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை தற்போது வழங்கப்படகின்ற தொகையை விடவும் மூன்று மடங்குகளாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைவாகவே நீதியமைச்சின் செயலாளரால் பிரஸ்தாப காதி நீதவான்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காதி நீதவான்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காதி நீதவான்கள் அமைப்பின்(Sri Lanka Quazi Judges Forum)தலைவரும்,இரத்தினபுரி மாவட்ட காதி நீதவானுமான இப்ஹாம் யஹியா , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.

 

VIDEOS

Recommended