முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் காலமானார்
ரஸீன் ரஸ்மின்
UPDATED: Aug 23, 2024, 12:53:20 AM
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் நேற்று (22) இரவு காலமானார்.
வைத்தியர் இன்திகாப், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஜமீனா கமருதீன் மற்றும் பஸ்மியா ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மரணிக்கும் போது இவருக்கு வயது 79 ஆகும்.
கடந்த திங்கட்கிழமை (19) திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த இவர் , அந்தக் கட்சியின் உருவாக்கத்திற்கு மு.கா ஸ்தாபகத் தலைவரான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுடன் இணைந்து மிகத் தீவிரமாக செயற்பட்டார்.
இலங்கையில் போர் தீவிரமடைந்த காலங்களில் வடமாகண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவானது மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவானார்.
மாத்திரமன்றி, இலங்கை - ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் நட்புறவை பேணி வருவதற்கும் டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் மரணிக்கும் வரை செயற்பட்டு வந்தார்.
அரசியல் செயல்பாடுகளில் முதிர்ச்சியடைந்த இவர், தேசிய அரசியல் கட்சிகளுடனும், கட்சித் தலைவர்களுடனும் மிகவும் நெருக்கமான உறவையும் பேணி வந்துள்ளார்.
புத்தளத்தில் அனுபவம் வாய்ந்த வைத்தியரான இவர், புத்தளத்தில் இலவச மருத்துவ சேவைகளையும் முன்னெடுத்து வந்துள்ளார்.
மாத்திரமன்றி, புத்தளத்தில் பல சமூகம் சார்ந்த போராட்டங்களில் தலைமை வகித்துள்ளதுடன், 2022 ஆம் ஆண்டு கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதற்கு அப்போதைய அரசு ஏற்பாடுகள் செய்த போது, அதற்கு எதிராக புத்தளத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்ட இவர், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் ஆரம்பித்து வைத்து எதிர்ப்பை வெளிக்காட்டினார்.
மேலும் , ஈரானிய மக்கள் அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றதைப் போல, மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை முன்னெடுத்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்ததைப் போல புத்தளம் மக்களும் அகிம்சை வழியில் போராடி தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர் அடிக்கடி கூறிவந்தார்.
இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் , ஒரு வேட்பாளராக போட்டியிட்டு வந்துள்ள இவர், இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட இருந்தார்.
அன்னாரது மரணம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மூவின மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஜனாஸா இன்று (23) இரவு புத்தளம் மஸ்ஜிதுல் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.