காணாமல் போன மீனவர்கள் விவகாரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சந்திப்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Aug 7, 2024, 3:12:51 PM
இலங்கையின் தென் கிழக்கில் அட்டாளைச்சேனையிலிருந்தும்,வடக்கில் பருத்தித்துறையில் இருந்தும் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பம்பலப்பிட்டியில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
அட்டாளைச்சேனை,கப்பலடி மீனவர் துறையில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐ.எல்.அகமது இர்பான், கே. ஆர்.நிஸ்பர் ஆகியோர் காணாமல் போனார்கள்.
இம் மாதம் 02ஆம் திகதி தமிழ் நாட்டில் இருந்து வெளியான செய்தியில் நாகப்பட்டினப் பகுதியில் இலங்கை மீனவரான ஐ.எல்.அகமது இர்பான் கரை சேர்ந்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மீனவரை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர ரீதியில் இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுத்ததுடன், சென்ற மாதம் 07ஆம்திகதி பருத்தித் துறையில் இருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற எம்.எஸ்.முஸ்தகீம்(அட்டாளைச்சேனை), என். குணபாலசிங்கம், ஏ.கே. பீ.பிரமேசிரி, ஏ.ராமகிருஷ்ணன் ஆகிய மீனவர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.
அட்டாளைச்சேனையில் இருந்து தமிழ் நாட்டில் கரை சேர்ந்துள்ள மீனவர் ஐ.எல்.அகமது இர்பானை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர ரீதியிலான ஏற்பாடுகளை இங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்படும் எனவும், பருத்தித் துறையில் இருந்து காணாமல் போன நான்கு மீனவர்கள் தொடர்பில் ஏற்கனவே பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் இதுவரை அம்மீனவர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமல் உள்ளதாகவும், அந்த மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பையும் கலந்து கொண்டார்.