கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு
எஸ்.எம்.எம்.முர்ஷித்
UPDATED: Nov 30, 2024, 4:25:10 AM
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாமில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருந்த 188 குடும்பங்களை சேர்ந்த 540 நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்த மழை ஓய்ந்த நிலையிலும் தாழ்நிலை பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்த காரணத்தினாலும் தங்களது குடிருப்புக்ளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமுக சேவை திணைக்களத்தினால் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த 188 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண சமுக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.இலங்குமுதன், கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பு செயலாளர் யூ.கே.எம்.அப்துல்லாஹ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.