வவுனியாவில் நாய் பராமரிப்பு காப்பகத்தை மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைக்காதீர்கள்: மக்கள் எதிர்ப்பு
வவுனியா
UPDATED: Jun 28, 2024, 3:41:53 PM
வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் புலம்பெயர் நாடான நோர்வேயில் இருந்து வந்த பெண் ஒருவர், வீதியில் தவிக்கும் நாய்களை பராமரிக்க காப்பகம் அமைக்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நோர்வேயில் இருந்து வந்த இப்பெண், வீதிகளில் நாய்களை பராமரிக்க தனது செலவில் ஏற்பாடுகள் செய்தார். ஆனால், அப்பகுதி மக்கள் இந்த முயற்சியால் கிராமத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் கூறினர்.
மகாரம்பைக்குளம் பொலிசார் இப்பகுதிக்கு வந்து, இருதரப்பினரையும் அழைத்து, அனுமதி பெறப்பட்டதா என விசாரணை நடத்தினர்.
நாய் காப்பகத்தின் உரிமையாளரான இப்பெண், இதற்கான அனுமதியை பெறவில்லை எனவும், அவற்றை தற்போது சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர், வீதிகளில் இருந்த நாய்களை பாதுகாப்பாக பராமரிக்க முயல்வதாகவும், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப அனைத்தையும் செய்துவருவதாகவும் கூறினார்.
பொது மக்கள், இது சீராக பராமரிக்கப்படாவிட்டால் நோய்தொற்று ஏற்படும் எனவும், பெண் வெளிநாடு சென்றபின் காப்பகம் சீராக பராமரிக்கப்படாவிட்டால் பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறினர். இதனை மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் அமைப்பதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ALSO READ | URNEXT திரைப்படத்தின் ஆரம்ப பூஜை
இருதரப்பினரின் கருத்துக்களை கேட்ட பொலிசார், காப்பகத்தில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டு, அனுமதி பெற்று தான் காப்பகத்தை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் அப்பகுதியிலிருந்து சென்றனர், மேலும் பொலிசார் இந்நிலையில் தமது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.