• முகப்பு
  • இலங்கை
  • சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.உமர் மெளலானாவின் மறைவு கவலை தருகிறது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.உமர் மெளலானாவின் மறைவு கவலை தருகிறது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

ஊடக பிரிவு

UPDATED: May 10, 2024, 6:35:27 PM

கல்வித்துறையிலும் வைத்தியத்துறையிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் Dr.உமர் மௌலானாவின் மறைவு பெறும் கவலை தருவதாகவும், அவரது மறைவு கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பு என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாபச் செய்தியில்,

மருதமுனையை பிறப்பிடமாகக்கொண்ட Dr.உமர் மௌலானா சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர். மருதமுனை அல்-மனார் பாடசாலையின் வளர்ச்சியில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. அதேபோன்று, ஹோமியோபதி வைத்தியத் துறையில், இவர் தனது ஊர் மக்களின் நலனுக்காகச் செயற்பட்ட ஓர் ஆளுமையாவார்.

கடந்த வருடம், சம்மாந்துறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டியில், நான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில், சம்மாந்துறை வலய பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பில், அதிக கரிசனையுடன் என்னுடன் கலந்துரையாடினார். அது தொடர்பிலான முன்னேற்பாடுகளையும் அவர் மேற்கொண்டு வந்தார். 

அதேபோன்று, மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய அவர், அப்பிரதேச கல்வி நலன் சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயற்ப்பட்டிருந்தார்.

அன்னாரின் மறைவு மண்ணுக்கும் மக்களுக்கும் கல்விச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். 

அவரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்க இறைவனை பிரார்திக்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் சேவைகளையும் நல்லமல்களையும் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவன பாக்கியத்தை நல்குவானாக என்றும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

VIDEOS

Recommended