இடைநடுவில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் முன்னெடுங்கள்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 1, 2024, 4:35:12 PM
ஜப்பானிய தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Isomata Akio) இடையிலான சந்திப்பொன்று இன்று (01) கொழும்பில் இடம்பெற்றது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவை தொடர்ந்தும் பேணுமாறும், இதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை பெற்றுத் தருவதாகவும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்தார்.
அவ்வாறே, கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் முன்னெடுத்து வரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறும், இதற்குத் தேவையான பூரண ஆதரவை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தாம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.