புதிய பலத்துடன் தேசிய அரசியல் அணி உருவாக வேண்டும் - அர்ஜுன ரணதுங்க
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 9, 2024, 6:36:49 AM
அர்ஜுன ரணதுங்க
எனது 20 வருட அரசியல் அனுபவமும்,19 வருட கிரிக்கட் அனுபவங்களையும் வைத்து பார்த்து எடுத்த தற்போதைய முடிவு கட்சி சார்பற்ற தேசிய அரசியல் இயக்கம் ஒன்றின் மூலமே எமது நாட்டை பாதுகாக்க முடியும் என முன்னாள் அமைச்சரும்,நட்சத்திர கிரிக்கட் வீரருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
நிலையான இலங்கைக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தமது கொள்ளை விளக்க கையேடு வெளியிடும் நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியில் நேற்றைய தினம் இடம் பெற்றது.
இதன் போது ஆரம்ப உரையினை நிகழ்த்துகையில் அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில் –
ஊழலற்ற நாட்டுடன்,திருடர்களற்ற துாய அரசியல்வாதிகளின் அவசியம் தற்போது தேவைப்படுகின்றது.
அதனை தற்போதைய பிரதான கட்சிகளினால் ஏற்படுத்த முடியாது.சம்பிரதாய அரசியலினால் இதனை செய்ய முடியாது என்பது தெளிவான உண்மையாகும்.
இதற்கு சிறந்த உதாரணமாக தற்போதைய கிரிக்கட்டினை பார்க்கலாம்.ஊழலுக்கு எதிராக போராடிய அமைச்சர் வீட்டுக்கு,அதனை செய்தவர்கள் தொடரந்தும் கதிரைகளில் இருக்கின்றனர்.
இந்த நிலைமாற வேண்டும் என்றால் புதிய எழுச்சியுடன் கூடிய மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும்.இதனை எவர் செய்தாலும் அவர்களுடன் இணைந்து பயணிக்க நான் தயாராகவுள்ளேன் என்றும் அவர் இதன் போது கூறினார்.
சகல மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி மதத்தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ண தேரர்,வீரசிங்க வீரசுமன,ரோஷான் ரணசிங்க,முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ,சட்டத்தரணிகள்,பல்கலைக்கழக விரிவுரைாயளர்கள்,வர்த்தகர்கள் மற்றும் துறைசார்ந்தவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.