பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் போராட்டம்

எஸ். அஷ்ரப்கான்

UPDATED: May 9, 2024, 6:37:47 AM

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டாக போராடி, அதன் பயனாக கொளுத்த சம்பள அதிகரிப்புக்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுவிட்டு, கூட்டாக போராடிய ஏனைய ஊழியர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, கைவிடப்பட்டவர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் பேசாது, கல்விசார் அணியினர் வாய் மூடி மௌனிகளாக இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதற்காக நீண்டகாலமாக போராடிவரும் நிலையில் அவர்களது போராட்டம் தற்போது தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

Srilanka News In Tamil 

குறித்தபோராட்டத்தின் ஏழாம் நாளான இன்று 2024.05.08 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக முற்றலில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் போதே ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து, அரசு ஏமாற்றி வருகின்றது. எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளது. அப்பட்டமான உண்மை என தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்விசாரா ஊழியர்களின் பங்கு என்பது பிரதானமான ஒன்று. இவ்வாறான சூழலில் மாணவர்கள் கூட கருத்து எதனையும் கூறவில்லை. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காது இருப்பதனூடாக அரசுக்கு அழுத்தங்களை மாணவர்களும் கல்விசார் தரப்பினரும் வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கும் இந்த சந்தர்ப்பத்தில் கல்விசார் தரப்பினர் சூம் தொழினுட்பத்தினூடாக தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது எங்களது போராட்டத்தை மலினப்படுத்தும் செயல்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம்.

Latest Srilanka News In Tamil

நாங்களும் பல்கலைக்கழக செயற்பாட்டுக்கு பங்களிப்பவர்கள் என்பதை குறித்த தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் எங்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசுக்கு அனைவரும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நேற்று 2024.05.07 ஆம் திகதி தலைநகரில் பல்கலைக்கழக ஊழியர்களின் ஒன்றிணைந்த பாரிய போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றும் 

வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

 

VIDEOS

Recommended